ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்: சாலைகளை குறுகச்செய்யும் நடைபாதைகள்
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் அவலம் ஏற்பட்டு இருப்பதால் சாலைகள் குறுகலாகி வருகின்றன.
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளில் நடைபாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால் வாகனங்களை ரோட்டில் நிறுத்தும் அவலம் ஏற்பட்டு இருப்பதால் சாலைகள் குறுகலாகி வருகின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
ஈரோடு மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் ரூ.1000 கோடி செலவில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பணியாக சாலைகளை அழகுப்படுத்தும் வேலை நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள ரோடுகளின் 2 ஓரங்களிலும் நடைபாதை அமைத்து வண்ணக்கற்கள் பதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது ஈரோடு கலைமகள் பள்ளிக்கூடம் வீதி, பெரியார் நகர், ஸ்டேட் வங்கி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இந்த பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே இருந்த ரோட்டில் 2 பக்கமும் நடைபாதை அமைக்கும் வகையில் பணிகள் செய்யப்படுகின்றன. சாலை மட்டத்தில் இருந்து ஒரு அடி உயரத்துக்கு கான்கிரீட் கட்டுமானம் எழுப்பப்பட்டு அதில் வண்ணக்கற்கள் பதிக்கப்படுகின்றன.
சாலைகளில்...
இதனால் சாலையின் அகலம் மிகவும் குறைந்து உள்ளது. சாலை மட்டத்தில் இருந்து ஒரு அடி அளவுக்கு நடைபாதை உயரமாக அமைக்கப்படுவதால் வாகனங்கள் எதுவும் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தும் அவலம் ஏற்படுகிறது. தற்போது ஓரளவு பணி முடிந்து உள்ள ஸ்டேட் வங்கி ரோட்டில் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த ரோடு முக்கியமான பார்க்கிங் (வாகனங்கள் நிறுத்தும்) ரோடாக இருந்து வந்தது. பன்னீர்செல்வம் பூங்கா பகுதிக்கு வரும் பொதுமக்கள் இந்த ரோட்டில் நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அதற்கு வசதியாக இந்த ரோடு இருந்தது. ஆனால் நடைபாதை அமைப்பதால் வழக்கம்போல வாகனங்கள் நிறுத்த வரும் வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கிறார்கள். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் இந்த ரோட்டிலேயே வாகனங்கள் நிறுத்துகிறார்கள். இதனால் இங்கு போக்குவரத்து பாதிக்கப்படும். இதுபோல் கலைமகள் பள்ளிக்கூட ரோட்டிலும் சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பெரியார் நகரிலும் இதே நிலைதான் உள்ளது.
பயனில்லாத நடைபாதைகள்
தற்போதைய நிலையை விட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் திறந்த பிறகு போக்குவரத்து அதிகரிக்கும். அப்போது நடைபாதைகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகளை அழகுபடுத்தும் பணி செய்வது வரவேற்கத்தக்கது. ஆனால் வாகன நிறுத்தங்களுடன் கூடிய சாலை அமைப்பு செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தற்போது வாகன நிறுத்தங்கள் குறித்து சற்றும் சிந்திக்காமல் நடைபாதைகள் சாலையை விட உயரமாக கட்டப்படுகின்றன. இதன் மூலம் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறலாம்.
ஆனால் கண்டிப்பாக அப்படி இருக்காது. காரணம் ஏற்கனவே பன்னீர் செல்வம் பூங்காவில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை நடைபாதை இருந்தபோது அதை பயன்படுத்த முடியாதபடி கடைகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டன. ஈரோடு கோர்ட்டு முதல் சம்பத்நகர் வரை உள்ள நடைபாதையையும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடிதான் உள்ளன. ஈரோட்டை பொறுத்தவரை நடைபாதைகள் பயனில்லாதவையாகவே இருந்திருக்கின்றன. எனவே நகரின் முக்கிய சாலைகளில் இதுபோன்று நடைபாதைகள் அமைக்கப்படும்போது அதையொட்டி இருக்கும் கடைகள் தங்கள் கடைகளை விரிவாக்கம் செய்ய உதவும். இதை தவிர்க்கவும், சாலை போக்குவரத்தை தடை இல்லாமல் இருக்க செய்யும் வகையிலும் புதிதாக அமைக்கப்படும் நடைபாதை பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் வசதியை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும். எனவே திட்டமிட்டு இந்த பணிகளை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story