புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் வசதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட நேதாஜி நகரில் 50 வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த சிலர் காலிக்குடங்களுடன் நேற்று காலை வெங்கநாயக்கன்பாளையத்தில் உள்ள மாதம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர் அலுவலகம் முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாதம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன், நில வருவாய் அலுவலர் யோக நரசிம்மன் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘நாங்கள் குடிநீர் தேவைக்காக தினமும் ½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கணக்கரசம்பாளையத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே நேதாஜி நகரிலேயே குழாய் அமைத்து குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கு ஊராட்சி தலைவர் கூறும்போது, ‘உங்கள் பகுதியில் குடிநீர் குழாய் அமைத்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story