செங்கல்பட்டில் சாலையோர கடைகளை அகற்ற வணிகர்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்


செங்கல்பட்டில் சாலையோர கடைகளை அகற்ற வணிகர்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்
x
தினத்தந்தி 5 Aug 2021 11:17 AM IST (Updated: 5 Aug 2021 11:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் சாலையோர கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முக்கிய வீதியான ராஜாஜி தெருவில் துணிக்கடைகள், வணிக வளாகங்கள், சிறு கடைகள் என 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று திடீரென பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் சாலையோரத்தில் உள்ள கடைகளை அகற்ற முயன்றனர்.

இதனை அறிந்த 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் நகராட்சி அதிகாரிகளையும் போலீசாரையும் முற்றுகையிட்டு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஸ்பசேரோ வணிகர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து வணிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து வணிகர்கள் கூறுகையில்:-

கடந்த 25 ஆண்டு காலமாக ராஜாஜி தெருவில் கடைகள் நடத்தி வருகிறோம். அனைத்து கடைகளுக்கும் நகராட்சி நிர்வாகத்துக்கு முறையான வரி செலுத்துகிறோம்.

தற்போது முன்னறிவிப்பின்றி சாலையோர கடைகளை நகராட்சி நிர்வாகம் திடீரென அகற்றினால் சிறுவணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அதிகாரிகள் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து வணிகர்களின் கடைகளை அந்த இடத்திலேயே நடத்த வழிவகை செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story