கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Aug 2021 7:35 PM IST (Updated: 5 Aug 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது 13 லட்சத்து 83 ஆயிரத்து 859 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த மாதம் 79 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளது. தமிழகத்தின் சிறப்பான செயல்பாட்டால், கடந்த மாதம் கூடுதலாக 19 லட்சம் தடுப்பூசிகள் கிடைத்தது. குறிப்பிட்ட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று லேசாக அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நிலையாக இருக்கிறது.

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களை கண்டறிந்து தேவையான கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2-வது தவணை தடுப்பூசி

சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. முன்கள பணியாளர்கள் 80 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 37 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

2-வது தவணை தடுப்பூசி போடாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட வேண்டும். இதுவரை கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 96 தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிக கட்டணம் கேட்கும் ஆஸ்பத்திரிகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story