மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி சாவு ஆலையை மூட அதிகாரிகள் உத்தரவு


மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி சாவு ஆலையை மூட அதிகாரிகள் உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2021 5:24 PM GMT (Updated: 5 Aug 2021 5:24 PM GMT)

மளிகை கடையில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த குளிர்பான ஆலையை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பொன்னேரி,

சென்னை பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், அஸ்வினி, தரணி(வயது 13) என்ற 2 மகள்களும் உள்ளனர். சதீஷ், பெசன்ட் நகர் கடற்கரையில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை சதீஷ்-காயத்ரி தம்பதியின் 2-வது மகள் தரணி, அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு சிறிது நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அப்போது அவரது உடல் நீல நிறமாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

சிறுமி சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி அஸ்வினி, சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி தரணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், பலியான சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் எனவும், சிறுமி குடித்த குளிர்பானத்தை ஆய்வுக்காக அனுப்பி வைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆலையை மூட உத்தரவு

சிறுமி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின்பேரில் சோழவரம் அடுத்த ஆத்தூர் கிராமத்தில் உள்ள அந்த தனியார் குளிர்பான தொழிற்சாலையில் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. செல்வம் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார்.

அங்குள்ள ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்தார். மேலும், அவரது தகவலின்பேரில் அங்கு வந்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ்சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சிறுமி குடித்த குளிர்பானம் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் தரம் குறித்த முடிவு தெரியும்வரை இந்த குளிர்பான தொழிற்சாலையை தற்காலிகமாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Next Story