ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ.51 ஆயிரத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்


ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு ரூ.51 ஆயிரத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர்
x
தினத்தந்தி 5 Aug 2021 7:53 PM GMT (Updated: 2021-08-06T01:23:26+05:30)

ரூ.2 லட்சம் கடனுதவி தருவதாக ஆசைக்காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.51 ஆயிரத்தை முகநூல் மூலம் மோசடி செய்த நபரை போலீசார் தேடுகிறார்கள்.

மதுரை,

ரூ.2 லட்சம் கடனுதவி தருவதாக ஆசைக்காட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.51 ஆயிரத்தை முகநூல் மூலம் மோசடி செய்த நபரை போலீசார் தேடுகிறார்கள்.

தனியார் நிறுவன ஊழியர்

மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் குமரேஸ் (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நான் தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டேன். இதற்கிடையே கடந்த 28-ந் தேதி முகநூல் பார்த்துக்கொண்டிருந்த போது "லோன்ஸ் இன் தமிழ்நாடு' என்ற பக்கத்தில் ஒரு செல்போன் எண் இணைக்கப்பட்டிருந்தது. கடனுதவி பெறலாம் என எண்ணி அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டேன். ஆனால், தொடர்பு கொள்ள முடியவில்லை.

ரூ.51 ஆயிரம் மோசடி

இதற்கிடையே தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து அதிகாரி பேசுவதாக ஒருவர் என்னை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், ரூ.2 லட்சம் கடனுதவி தருவதாக கூறினார். மேலும் அதற்கு முன்பணமாக ரூ.51 ஆயிரத்து 300 கட்ட வேண்டும் எனவும் கூறினார். இதனை நம்பிய நான் வங்கி மற்றும் செல்போன் மூலமாக அந்த பணத்தை செலுத்தினேன். ஆனால் கடன் ஏதும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே மீண்டும் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. நூதன முறையில் என்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

விழிப்புணர்வு

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சமூக வலைதளங்களில் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தும் இருக்கிறது. சமூக வலைத்தளங்களை கையாளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இதில் கைதேர்ந்த சிலர் இதனை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். எண், ரகசிய எண் போன்றவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என போலீசார் ஒவ்வொரு முறையும் எச்சரிக்கிறார்கள். ஆனால், அதனை பொதுமக்கள் கடைபிடித்தபாடில்லை. படித்த இளைஞர்கள் கூட தற்போது இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தேவையில்லாத சமூக வலைத்தள பக்கத்தை பார்வையிடாமல் இருப்பது சிறந்தது" என்றார்.

Next Story