ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் திறந்தவெளி பகுதிகளில் மதுக்குடிப்பவர்களால் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு; போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?


ஈரோடு மாநகர் பகுதியில் பல இடங்களில் திறந்தவெளி பகுதிகளில் மதுக்குடிப்பவர்களால் சட்டம் -ஒழுங்கு பாதிப்பு; போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 6 Aug 2021 2:32 AM IST (Updated: 6 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் பகுதியில் திறந்தவெளியில் மதுக்குடிக்கும் குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் திறந்தவெளியில் மதுக்குடிக்கும் குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
திறந்தவெளி மது பார்கள்
ஈரோடு மாநகர் பகுதியில் சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குடிபோதையில் தள்ளாடி சாலைகளின் ஓரத்தில் மயங்கி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மதுக்கடைகள் அமைந்திருக்கும் பகுதிகள் வழியாக பொதுமக்கள் செல்ல முடியாதபடி குடிமகன்கள் திறந்தவெளிகளிலேயே உட்கார்ந்து மதுக்குடித்து வருகிறார்கள்.
ஈரோடு பஸ் நிலையம் அருகே அகில்மேடு 7-வது வீதியில் உள்ள மதுக்கடையில் குடிக்க வரும் மதுப்பிரியர்கள் பகல் நேரத்திலும் அங்கே சாலையோரத்தில் உட்கார்ந்து திறந்த வெளி பாராக சாலையை உபயோகிக்கிறார்கள். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் வாகனங்களில் செல்லவே பயப்படும் சூழல் உள்ளது. இதுபோல் அனைத்து மதுக்கடைகளின் அருகிலும் எந்த வெட்கம், பயம் இன்றி குடிமகன்கள் தள்ளாடிக்கொண்டே மதுபாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு மது அருந்துகிறார்கள்.
சண்டை
சிறிய குறுக்கு சந்துகள், திறந்தவெளி காலி இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் சற்று மறைவான இடங்கள் என்று பல இடங்களிலும் குடிமகன்கள் கூடி மதுக்குடித்து வருகிறார்கள். முக்கிய சாலைகளில் கூட கார்களை நிறுத்திவிட்டு காரையே பாராக மாற்றி குடிமகன்கள் மது அருந்தி மகிழ்கிறார்கள். இது சட்டம் ஒழுங்குக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோட்டில் எந்த ரோட்டில் சென்றாலும் 4 அல்லது 5 பேருக்கு மேல் கொண்ட கும்பல் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. இரவு நேரத்தில் அனைத்து சாலைகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குடிபோதையில் உருண்டுகொண்டு இருப்பதையும், எங்கே படுத்திருக்கிறோம் என்ற சுய நினைவே இல்லாமல் கிடப்பதையும் காணலாம். சமீபத்தில் பி.பி.அக்ரகாரம் பகுதியில் குடிபோதையில் ஒரு கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டம் -ஒழுங்கு
இதுபோல் குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து என பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாநகர் பகுதியில் சமீப காலமாக திறந்தவெளியில் நின்று மது பாட்டில்களை வைத்துக்கொண்டு மதுக்குடிக்கும் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குடிமகன்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குடிக்க தொடங்குவது இல்லை. ஆனால் மதுபோதை ஏறிவிட்டால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமல் சண்டையிட்டுக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, மது குடித்தபின்னர் காலி பாட்டில்களை சாலையில் அடித்து நொறுக்கி போடுகிறார்கள்.
ரோந்து
இதனால் நடந்து செல்லும் பலரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பாட்டில்களை உடைத்து சாக்கடை கால்வாயில் வீசுகிறார்கள். இதனால் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
புறநகர் பகுதிகளில் விவசாய நிலங்கள், விவசாய நிலங்களுக்கான பாசன கால்வாய்களில் மதுபாட்டில்களை உடைத்து போடுவதால் விவசாயிகள் கடுமையாக சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே பொது இடங்கள், திறந்தவெளிகளில் மதுக்குடிப்பதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதிகளில் திறந்தவெளியில் மதுக்குடிப்பதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை சரிசெய்ய போலீஸ் ரோந்து அதிகப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story