திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரி; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 2:32 AM IST (Updated: 6 Aug 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திம்பம் மலைப்பாதை
தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம்-கர்நாடகா மாநிலம் இடையே தினமும் கார், பஸ், லாரி, சரக்கு வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் தமிழகம்-கர்நாடகா மாநிலம் இடையே முக்கிய போக்குவரத்தாக திம்பம் மலைப்பாதை உள்ளது.
குறுகிய வளைவுகளை கொண்டதால் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. மேலும் சில நேரம் கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
சரக்கு வேன் கவிழ்ந்தது
நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதை 8-வது கொண்டை ஊசி வளைவில் வெங்காய மூட்டை பாரம் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சரக்கு வேனை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் 26-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற மர துண்டுகள் பாரம் ஏற்றிய லாரி திரும்பும்போது பழுதாகி நின்றதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
லாரி பழுது
இந்தநிலையில் நேற்று கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி 9-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் நின்றது. இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன.
மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்த மற்றொரு லாரி டிரைவர் திரும்ப முடியாமல் நின்ற லாரியை மீட்டார். அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீரானது. அதனை தொடர்ந்து அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story