தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம்- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
மக்களை தேடி மருத்துவம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்கி வைத்தார்.
பின்னர் முதல்-அமைச்சரின் உத்தரவின்படி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். எஸ்.செல்வராஜ் எம்.பி., அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு என்னென்ன பணிகள் மக்களுக்காக செய்யப்பட வேண்டியிருந்தது, எதில் குறைபாடுகள் இருக்கிறது, எதில் தாமதம் ஏற்படுகிறது என்பதையெல்லாம் உணர்ந்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலையினை கருத்தில் கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் நிவாரண உதவிகளை வழங்கினார். 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பும் அளித்தார்.
1,409 பேர் பயன்பெறுவார்கள்
என்னென்ன குறைகள் இருக்கின்றதோ அதனை முழுமையாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். மாவட்ட கலெக்டரும், சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர்களும் தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த அரசுக்கு திட்டத்தை அனுப்பியுள்ளார்கள். இத்திட்டம் நிறைவேற்றப்படும் போது கூடுதல் வசதிகள் மருத்துவமனையில் கிடைக்கும்.
விரைவாக இத்திட்டத்தை நிறைவேற்ற முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக தாளவாடி வட்டாரத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் தாளவாடி வட்டாரத்தில் முதல்கட்டமாக 1,409 பயனாளிகள் பயன்பெற உள்ளனர். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி ‘உங்கள் தொகுதி முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளையும், 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவி, மாவட்ட செயலாளர் நல்லசிவம், உதவிதிட்ட இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சவுண்டம்மாள், வட்டார மருத்துவர் தமிழ்செல்வம், தாசில்தார் உமாமகேஷ்வரன், டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story