10 நாட்களாக 100 அடியாக நீடிக்கும் பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 100 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில் செல்லும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
100 அடியை எட்டியது
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. பவானிசாகர் அணையை பொறுத்தவரை மழைக்காலத்தில் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி வரை அணையின் நீர்மட்டம் 100 அடி வரை மட்டுமே நிறுத்த வேண்டும்.
ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 102 அடி வரை தண்ணீர் தேக்கலாம். அக்டோபர் 1-ந் தேதியில் இருந்து அணையின் முழு கொள்ளளவான 105 அடி வரை தண்ணீர் தேக்கலாம். எனவே கடந்த 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பவானிசாகர் அணை 100 அடியை எட்டியதும் பவானி ஆற்றின் வழியாக உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப உபரிநீர் திறப்பு அதிகரித்து குறைக்கப்பட்டது.
உபரி நீர் நிறுத்தம்
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் பவானிசாகர் அணையில் 102 அடி வரை தண்ணீரை நிறுத்தலாம். இதன் காரணமாக கடந்த ஜூலை 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடி வரை தேக்கப்படும் அதற்கு மேல் தண்ணீர் வரத்து அதிகரித்தால் மீண்டும் உபரி நீர் திறக்கப்படும்.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து 100 அடியாக இருந்து வருகிறது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 11-வது நாளாக 100.26 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 328 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனப் பகுதிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரும், குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
Related Tags :
Next Story