ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை- அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் அனுமதி இல்லை


ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில்  சாமி தரிசனத்துக்கு தடை- அணைக்கட்டு, ஆறுகளில் நீராடவும் அனுமதி இல்லை
x
தினத்தந்தி 6 Aug 2021 2:34 AM IST (Updated: 6 Aug 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில், ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு மற்றும் ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில், ஆடி அமாவாசை அன்று 23 கோவில்களில் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டு மற்றும் ஆறுகளில் நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 
சாமி தரிசனம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசையான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)  கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், அணைக்கட்டுகள் மற்றும் ஆறுகளில் நீராடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்ரமணிய சாமி கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், சூரம்பட்டி வலசு மாரியம்மன் கோவில், கோபி பச்சைமலை சுப்ரமணிய சாமி கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், நஞ்சை காளமங்கலம் மத்யபுரீஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், நாகேஸ்வரர் குலவிளக்கம்மன் கோவில், வைராபாளையம் காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவில், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
அணைக்கட்டுகளில் நீராட தடை
மேலும் நசியனூர் மதுரகாளியம்மன் கோவில், திருவாச்சி கரியபெருமாள் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில், பெருந்துறை செல்லாண்டியம்மன் கோவில், அம்மாபேட்டை சொக்கநாத சாமி கோவில், காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கருங்கல்பாளையம் சோழீஸ்வரர் கோவில், ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் ஆகிய 23 கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சித்தோடு காலிங்கராயன் அணைக்கட்டு, மலையம்பாளையம் காரணம்பாளையம் அணைக்கட்டு, கடத்தூர் கொடிவேரி அணைக்கட்டு, பவானிசாகர் அணை ஆகிய பகுதிகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Next Story