மேட்டூர் வலது கரை வாய்க்கால் பகுதி சுரங்க நீர்வழிப்பாதையில் தேங்கிய கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்


மேட்டூர் வலது கரை வாய்க்கால் பகுதி சுரங்க நீர்வழிப்பாதையில் தேங்கிய கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Aug 2021 2:48 AM IST (Updated: 6 Aug 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் வலது கரை வாய்க்கால் பகுதி சுரங்க நீர்வழிப்பாதையில் தேங்கிய கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

அம்மாபேட்டை
மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை பாசனத்துக்கு கடந்த 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் மேற்கு கரை வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் சென்றது. குறிச்சி பகுதியில் இந்த வாய்க்காலின் குறுக்கே சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு தரைக்கடியில் தண்ணீர் சென்று மற்றொரு பகுதியில் வெளியேறும் வகையில் சுரங்க நீர்வழிப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுரங்க நீர்வழிப்பாதையில் கடந்த 3-ந் தேதி இரவு அடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலின் கரைகளை தாண்டி தண்ணீர் வெளியேறி சென்றது. இதுபற்றி அறிந்ததும் பொதுப்பணித்துறையினர் உடனடியாக வாய்க்காலில் தண்ணீர் திறப்பதை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகள் அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். தரைக்கடியில் செல்லும் நீர்வழிப்பாதையில் உள்ள 2 காற்று போக்கிகளில் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் கற்கள், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், முள், வேளாண் கழிவுகள் போன்றவை அடைத்திருந்தன. இதையடுத்து சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, கழிவுகளை அகற்றும் பணியில் கடந்த 3 நாட்களாக தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பணிகள் நாளை (அதாவது இன்று) காலை நிறைவடைந்துவிடும். இதைத்தொடர்ந்து பாசனத்துக்காக உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்படும்,’ என்றனர்.

Next Story