மின்வாரிய அலுவலகங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் திடீர் ஆய்வு


மின்வாரிய அலுவலகங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Aug 2021 3:14 PM IST (Updated: 6 Aug 2021 3:14 PM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய அலுவலகங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடிபோதையில் பணியில் இருந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பெரம்பூர்,

சென்னையில் அவ்வப்போது திடீர் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கட்டுப்பாடு அறைக்கு சென்ற அமைச்சர், அங்கு நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது பொதுமக்களில் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த அழைப்பை எடுத்து பேசினார். பின்னர் அவர் கொடுத்த புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

பணியிடை நீக்கம்

அதைதொடர்ந்து கொருக்குபேட்டை துணை மின் நிலைய அலுவலகத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி சென்றார். இதனை சற்றும் எதிர்பாராத மின்வாரிய ஊழியர்கள், அமைச்சரின் திடீர் வருகையால் திக்குமுக்காடி போனார்கள்.

பின்னர் அங்கு அமைச்சர் ஆய்வு செய்தபோது, லைன் மேன் ஜெகன் என்ற ஊழியர் மதுபோதையில் பணியில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டார்.

நடவடிக்கை

மேலும் தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல் அறிந்த அமைச்சர், அந்த பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்ற மின் இணைப்பு சரி செய்யும் பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.

அப்போது அந்த பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “உங்கள் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். உங்கள் குறைகள் பற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

Next Story