அந்தியூர், கோபி, சென்னிமலை பகுதி கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அந்தியூர், கோபி, சென்னிமலை பகுதிகளில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஈரோடு
அந்தியூர், கோபி, சென்னிமலை பகுதி கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அந்தியூர்
அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமையானதுமான அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலின் நடை சாத்தப்பட்டது. பத்ரகாளி அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மஞ்சள் பட்டு உடுத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அதேபோல கோவில் வளாகத்தில் அமைந்துள்ள செல்லீஸ்வரர் கோவிலும் நடை சாத்தப்பட்டு இருந்தது.
கோபி
இதேபோல் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில் ஆகிய கோவில்களின் நடை சாத்தப்பட்டு இருந்தது. இதனால் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வழக்கமான பூஜைகள் மட்டும் கோவில்களில் நடைபெற்றன.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் பகுதிகளில் ஆடி வெள்ளியையொட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தாளவாடி
தாளவாடி மலைப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மலர் அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் காந்திநகர் மாகாளி அம்மனுக்கு வளையல் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சென்னிமலை
சென்னிமலையில் உள்ள முருகன் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு திடீரென மாவட்ட நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று கோவில்களின் நடைகள் சாத்தப்பட்டன. மேலும் ஆடிப்பூரம் தினமான வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) அன்றும் இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் தடை உத்தரவு தெரியாமல் நேற்று ஏராளமான பக்தர்கள் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்தனர். ஆனால் அடிவாரத்திலேயே தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் மாரியம்மன் கோவில், கைலாசநாதர் கோவில்களிலும் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலின் வெளிப்பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
கொடுமுடி
கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள வடிவுடைநாயகி, வடக்குத்தெரு புது மாரியம்மன் கோவில், சென்னசமுத்திரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story