தங்கம் பாலீஸ் செய்வதாக கூறி நூதன முறையில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் 5 பவுன் தாலிக்கொடி அபேஸ்; மர்மநபர்களுக்கு வலைவீச்சு


தங்கம் பாலீஸ் செய்வதாக கூறி நூதன முறையில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம்  5 பவுன் தாலிக்கொடி அபேஸ்; மர்மநபர்களுக்கு  வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Aug 2021 3:20 AM IST (Updated: 7 Aug 2021 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் தங்கம் பாலீஸ் செய்வதாக கூறி 5 பவுன் தாலிக்கொடியை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு
ஈரோட்டில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியரிடம் தங்கம் பாலீஸ் செய்வதாக கூறி 5 பவுன் தாலிக்கொடியை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஐ.டி. ஊழியர்
ஈரோடு வீரப்பம்பாளையம் அரசமர விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி என்கிற குப்புசாமி (வயது 56). இவரது மகள் ஷிபா (26). கோவையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணமான இவர் பிரசவத்துக்காக தந்தையின் வீட்டில் இருந்தார். அவருக்கு குழந்தை பிறந்து விட்டது.
நேற்று காலை மணி வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். வீட்டில் மணியின் மனைவி பேபி என்கிற நிர்மலாதேவி (45) மற்றும் ஷிபா ஆகியோர் இருந்தனர். நிர்மலாதேவி புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை கவனிக்கும் பணியில் இருந்தார். பகல் 11.30 மணி அளவில் டிப்-டாப்பாக உடை அணிந்த 2 வாலிபர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், குக்கர் உள்ளிட்ட பாத்திரங்களை புதிதாக பளபளக்க செய்யும் பவுடர் வைத்து இருப்பதாகவும், அதை சோதித்து பார்த்து வாங்கலாம் என்றும் கூறினார்கள்.
அதை நம்பிய நிர்மலாதேவியும், ஷிபாவும் வீட்டில் இருந்த சில பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். அவர்கள் அந்த பொருட்களை ஒரு பவுடர் போட்டு பளபளப்பாக கொடுத்ததாக தெரிகிறது. அதை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் உங்கள் காலில் கிடக்கும் மெட்டியை கூட புதிதாக மாற்ற முடியும் என்றனர். உடனடியாக ஷிபா காலில் கிடந்த மெட்டியை கழற்றி கொடுத்தார். அவர்கள் அதையும் தூய்மை செய்து கொடுத்தனர்.
தங்கத்தை பளபளப்பாக்க...
அப்போது நிர்மலா தேவி கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு இருப்பதை மர்ம நபர்கள் கவனித்தனர். அவர்கள் ஷிபாவிடம், உங்கள் கழுத்தில் கிடக்கும் தங்கச்சங்கிலியை கூட பாலீஸ் செய்து பளபளப்பாக்கி புதிதாக மாற்ற முடியும் என்றனர். அவர் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக, நகையை கழற்ற வேண்டாம். அப்படியே நாங்கள் தரும் ரசாயன பவுடரை தொட்டுப்பாருங்கள் என்று கூறி கொடுத்து உள்ளனர். அவரும் அதை கையில் வைத்து சங்கிலியில் தடவினார். உடனடியாக ரசாயனம் உடலில் பட்டுவிடக்கூடாது. கழற்றி கழுவி விடுங்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக ஷிபா சமையல் அறைக்கு சென்றார். எதிர்பாராதவிதமாக மர்ம நபர்களில் ஒருவர் ஷிபாவுடன் நட்பாக பேசிக்கொண்டே சமையல் அறைக்கும் சென்றார். அதே நேரம் இன்னொருவர் நைசாக வெளியே சென்றார். ஷிபாவுடன் சமையல் அறைக்கு சென்ற டிப்டாப் ஆசாமி தண்ணீரில் நகையை கழுவும்போது பாத்திரத்தில் கொஞ்சம் மஞ்சள்பொடி போட வேண்டும் என்று கேட்டு ஒரு ஸ்பூனில் மஞ்சள் பொடியை தண்ணீரில் போட்டு கலக்கினார். அதன் உள்ளே தங்கச்சங்கிலியை போட கூறினார். மஞ்சள் போதிய அளவு இல்லை. நீங்களும் கொஞ்சம் போடுங்கள் என்று ஷிபாவின் கவனத்தை திசை திருப்பிய அவர், ஷிபாவுடன் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் குறித்தும் விசாரித்தார். ஷிபா மஞ்சள் பொடியை தண்ணீரில் போட்ட உடன் சிறிது நேரம் கலக்கி விட்டு 5 நிமிடம் கழித்து பாருங்கள் என்று கூறிவிட்டு வேக வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது நிர்மலாதேவி குழந்தையை கவனிப்பதில் தீவிரமாக இருந்தார்.
5 பவுன் தாலிக்கொடி அபேஸ்
மர்ம நபர் திடீரென்று வேகமாக வெளியே சென்றதும் சந்தேகம் அடைந்த ஷிபா தங்கச்சங்கிலியை போட்ட பாத்திரத்தில் இருந்து தண்ணீரை ஊற்றிவிட்டு பார்த்தார். ஆனால், அவர் அதில் போட்ட தங்கச்சங்கலியை காணவில்லை. அது 5 பவுன் கொண்ட அவரது தாலிக்கொடியாகும்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டுக்கொண்டே வெளியே ஓடி வந்தார். ஆனால் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மாயமாகிவிட்டனர்.
இதுபற்றி ஷிபா வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது அங்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்தனர். ஷிபாவின் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் நபர் ஏற்கனவே 2 சக்கர வாகனத்தை தயாராக வைத்திருந்தார். 2-வது நபர் தாலிக்கொடியை அபேஸ் செய்து விட்டு வேக வேகமாக ஓடிச்சென்று 2 சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி ஓடியது கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த பதிவை வைத்து நூதன முறையில் 5 பவுன் தாலிக்கொடியை திருடிச்சென்ற 2 டிப் டாப் ஆசாமிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story