காஞ்சீபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.2 கோடி சொத்து, ரூ.38 லட்சம் அபகரிப்பு 4 பேர் மீது வழக்கு


காஞ்சீபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.2 கோடி சொத்து, ரூ.38 லட்சம் அபகரிப்பு 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Aug 2021 4:44 AM GMT (Updated: 7 Aug 2021 4:44 AM GMT)

காஞ்சீபுரத்தில் டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.2 கோடி சொத்து, ரூ.38 லட்சத்து 35 ஆயிரம் அபகரித்ததாக சீட்டு கம்பெனி உரிமையாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் நாகலூத்து தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் காஞ்சீபுரத்தில் சீட்டு கம்பெனி நடத்தி வருகிறார். இந்த சீட்டு கம்பெனியில் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பலரும் சீட்டு செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரிய காஞ்சீபுரம் ராயன் குட்டை பள்ளத்தெருவை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சேகர் தன்னுடைய ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்து, ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்தை சீனிவாசன் உள்பட 4 பேர் அபகரித்து கொண்டதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறுகையில்:-

சீனிவாசனிடம், 2019-ம் ஆண்டு ரூ.1 கோடியில் 2 சீட்டும், ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.3 லட்சம் போன்ற பிரிவுகளில் தலா ஒரு சீட்டும் செலுத்தி வந்தேன். அதற்கான செக்யூரிட்டியாக களியனூரில் உள்ள 5 சொத்துக்கள், பாகப்பிரிவினை பத்திரம் என ரூ.2 கோடி மதிப்புடைய சொத்துகளை சீட்டு நிறுவனத்தில் உள்ள ஒரு இயக்குனரான கார்த்திக் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தேன்.

அதன் பின்பு ரூ.1 கோடி மதிப்புடைய சீட்டை எடுக்க அனுமதித்தனர். இந்த நிலையில் நான் செலுத்தி வந்த மற்ற சீட்டுகளை திடீரென ரத்து செய்துவிட்டனர். ரத்து செய்யப்பட்ட சீட்டுகளில் செலுத்திய தொகையான ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்தை தரவில்லை.

இது தவிர நான் எழுதி கொடுத்த ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகளை எனக்கோ எனது தந்தைக்கோ தெரியாமல் சீனிவாசனின் மகனான சரவண பெருமாளுக்கு, கிரயம் செய்து கொடுத்துள்ளனர். என்னுடைய ரூ.38 லட்சத்து 35 ஆயிரம், ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகளை அபகரித்து கொண்டனர். திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனர் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதையொட்டி காஞ்சீபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், சந்தோஷ், சரவணபெருமாள், கார்த்திக் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story