தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை
மேலூர் அருகே வேலை பார்த்த அலுவலகம் முன்பு காரை நிறுத்த கூடாது என தனியார் நிறுவன ஊழியர் கூறியதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழபதினெட்டாங்குடியை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர் மேலூர்-திருச்சி மெயின்ரோட்டில் பஸ் நிலையம் அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் இவர் வேலைபார்த்த அலுவலகம் முன்பு நேற்று மாலை ஒரு கார் வந்து நின்றது. இதைபார்த்த ராஜா, காரை அலுவலகத்தை மறித்து நிறுத்தாமல் ஒரமாக நிறுத்துங்கள் என கூறினார். அப்போது அவருக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது காரில் வந்தவர் செல்போனில் யாரிடமோ பேசிய சிறிது நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் கம்பு, இரும்பு கம்பியுடன் சிலர் வந்தனர். அவர்கள் கம்பு மற்றும் கம்பியால் சரமாரியாக ராஜாவை தாக்கினர்.
இதை ராஜாவுடன் வேலை பார்க்கும் சக ஊழியர் அப்பாஸ்(45) தடுக்க முயன்றார். அப்போது அவரும் தாக்கப்பட்டார். பின்னர் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த ராஜாவை மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். அப்பாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை தீவிர படுத்தினார். மேலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து காரில் தப்பிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அங்கு கண்காணிப்பு கேமராவில் காரில் வந்தவர்கள் பற்றி பதிவாகி உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story