சத்தி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்; நகை-பணம் நாசம்


சத்தி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல்; நகை-பணம் நாசம்
x
தினத்தந்தி 8 Aug 2021 2:04 AM IST (Updated: 8 Aug 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. நகை, பணமும் நாசமானது. தக்கசமயத்தில் வெளியே ஓடி வந்து 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சத்தியமங்கலம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. நகை, பணமும் நாசமானது. தக்கசமயத்தில் வெளியே ஓடி வந்து  4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தூய்மை பணியாளர்
சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் ஊராட்சி பெரியார் நகரில் வசித்து வருபவர் பெருமாள். அவருடைய மனைவி சரோஜா. இவர் உக்கரம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவர்களது வீட்டின் மேற்கூரை தகர சீட்டுகளால் ஆனது. பெருமாள் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் இ்ரவு வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் இரவு  வீட்டின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
தீ விபத்து
புகைமூட்டம் உருவானதால் தூங்கி கொண்டிருந்த பெருமாள் திடுக்கிட்டு எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்  குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வேகமாக வெளியே ஓடி வந்தார். மளமளவென பரவிய தீ வீட்டில் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதுபற்றி உடனே சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.
நகை-பணம் நாசம்
தீ விபத்தில் வீட்டில் இருந்த 1¼ பவுன் தங்க நகை, ரூ.28 ஆயிரம், நெல் 15 மூட்டைகள் மற்றும் ரேஷன் கார்டு, ஆதார், நிலப்பட்டா, அனைத்துமே எரிந்து நாசமானது. பெருமாள் மகள் பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மதிப்பெண் சான்றிதழை நேற்று தான் வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அதுவும் எரிந்து சேதமானது.
தீ விபத்து நடந்தபோது தக்கசமயத்தில் பெருமாள், மனைவி மற்றும் மகன், மகளை அழைத்துக்கொண்டு வெளியே ஓடி வந்ததால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர்.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ, உக்கரம் ஊராட்சித் தலைவர் முருகேசன், தாசில்தார் ரவிசங்கர், துணைத்தலைவர் புனிதா ஆகியோர் அங்கு சென்று எரிந்து சாம்பலான வீட்டை பார்வையிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெருமாளுக்கு ஆறுதல் கூறி ஊராட்சி ஒன்றிய தலைவர் தன் சொந்த செலவில் அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்.

Next Story