துணி காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய் மகள் பேத்தி பலி ஊத்தங்கரை அருகே பரிதாபம்
ஊத்தங்கரை அருகே துணியை காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய் மகள் பேத்தி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கல்லாவி:
ஊத்தங்கரை அருகே துணியை காயபோட்ட போது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிச்சுமணி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இந்திரா (வயது 52). இவர்களின் மகள் மகாலட்சுமி (25). இவருக்கும், மிட்டப்பள்ளியை சேர்ந்த சிவா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 வயதில் அவந்திகா என்ற பெண் குழந்தை இருந்தது.
மகாலட்சுமி, தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை இந்திரா துணி துவைத்து விட்டு தனது பேத்தி அவந்திகாவை இடுப்பில் வைத்துக் கொண்டு ஈரத்துணிகளை வீட்டு முன்பு உள்ள கம்பியில் காய போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேல் பகுதியில் சென்ற மின்சார கம்பி கொடியில் உரசியதில் துணியில் பட்டு பாட்டி, பேத்தி மீது மின்சாரம் தாக்கியது.
3 பேர் பலி
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு மகாலட்சுமி ஓடி வந்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு தாய், மகள், பேத்தி ஆகிய 3 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிங்காரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் மின்சாரம் தாக்கி இறந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உறவினர்கள் கதறல்
இறந்து போன 3 பேரின் உடல்களை கண்டு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story