வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்


வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்
x
தினத்தந்தி 9 Aug 2021 3:23 AM IST (Updated: 9 Aug 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு
வெளிமாநிலங்களில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்றின் 3-வது அலை பரவுவதை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி பால், மருந்தகம் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
டீக்கடைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனை
கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஈரோடு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு உள்ளார். எனவே மாநில எல்லை பகுதிகளான ஆசனூர், பர்கூர் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு 72 மணிநேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அல்லது கொரோனா தடுப்பூசிகள் 2 தவணைகளையும் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழ் காண்பிக்கப்பட்டால் மட்டுமே, ஈரோட்டுக்குள் வர அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஈரோடு வரும் ரெயில்வே பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் ஓரிரு நாட்களில் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story