மாவட்ட செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் + "||" + Audi New Moon

ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன- வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
ஈரோடு மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி முக்கிய கோவில்கள் நடை சாத்தப்பட்டன. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பண்ணாரி அம்மன் கோவில்
சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கிச் செல்வது வழக்கம். தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி வெள்ளிக்கிழமை அன்று தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதன்படி நேற்று ஆடி அமாவாசையையொட்டி பண்ணாரி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது. எனினும் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நேற்று காலை 5 மணி முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் நுழைவு வாயிலின் அருகே சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டார்கள். அதுபோல நுழைவாயிலுக்கு வெளியே நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் மிளகும் உப்பும் தூவி வணங்கினார்கள்.
கோபி
இதேபோல் ஆடி அமாவாசையையொட்டி கோபி பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் நடை சாத்தப்பட்டு இருந்தன. கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், சாரதா மாரியம்மன் கோவில், அளுக்குளி செல்லாண்டியம்மன் கோவில், கொளப்பலூர் பச்சை நாயகி அம்மன் கோவில், கோபி ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரன் கோவில் உள்ளிட்ட கோவில்கள் நடை சாத்தப்பட்டு இருந்தன. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோபி டவுன் மாதேஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மாதேஸ்வரருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிவப்பு பட்டு அணிவித்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏராளமானோர் காலை 5 மணி முதலே கோவிலுக்கு வெளியே வந்து நின்றனர். பின்னர் வெளியே நின்றபடி அம்மனை தரிசனம் செய்தனர்.
அதேபோல் கோவில் வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், கோட்டை பெருமாள் கோவில், ஈஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் பேட்டை பெருமாள் கோவிலில் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.
புதுப்பாளையம்
புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் அந்தியூர் பகுதியில் உள்ள கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. இதில் அந்தியூர், தவுட்டுப்பாளையம், சந்தியபாளையம், வெள்ளையம்பாளையம், அத்தாணி, ஆப்பக்கூடல், பர்கூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நஞ்சைகாள மங்களம் குலவிளக்கு அம்மன் கோவில் நேற்று நடை சாத்தப்பட்டு இருந்தது. வெங்கம்பூர், ஊஞ்சலூர், காசிபாளையம், கொளாநல்லி, ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.‍ இதேபோல் கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள், நடைபெற்றன.
கொளத்துப்பாளையம் பகவதி அம்மன் கோவில், வடக்குப் புதுப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில், வெங்கம்பூர் அங்காளம்மன் கோவில் மற்றும் கிராமக் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் தரிசனம் செய்தனர். நஞ்சை காளமங்களம் குலவிளக்கு அம்மன் கோவிலில் நேற்று நடை சாத்தப்பட்டு இருந்தது.