கொரோனா ஊரடங்கால் தடை விதிப்பு; பவானி கூடுதுறை வெறிச்சோடியது- அம்மாபேட்டை காவிரிக்கரையில் தடையை மீறி தர்ப்பணம்


கொரோனா ஊரடங்கால் தடை விதிப்பு; பவானி கூடுதுறை வெறிச்சோடியது- அம்மாபேட்டை காவிரிக்கரையில் தடையை மீறி தர்ப்பணம்
x
தினத்தந்தி 9 Aug 2021 3:24 AM IST (Updated: 9 Aug 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் தடை விதிக்கப்பட்டதால் பவானி கூடுதுறை வெறிச்சோடியது. அம்மாபேட்டை காவிரிக்கரையில் தடையை மீறி தர்ப்பணம் நடந்தது.

ஈரோடு
கொரோனா ஊரடங்கால் தடை விதிக்கப்பட்டதால் பவானி கூடுதுறை வெறிச்சோடியது. அம்மாபேட்டை காவிரிக்கரையில் தடையை மீறி தர்ப்பணம் நடந்தது.
பவானி கூடுதுறை
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வார்கள். இதனால் முன்னோர்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.
ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை அன்று பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்யவும், நீர்நிலைகளில் புனிதநீராடவும் தடை விதித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பவானி லட்சுமிநகரில் உள்ள காவிரி ஆற்றில் ஒரு சிலர் தடையை மீறி குளித்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
வெறிச்சோடியது
அதன்படி ஆடிப்பெருக்கு அன்று பவானி கூடுதுறையில் புனிதநீராட தடை விதிக்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பவானி கூடுதுறை வெறிச்சோடியது. ஆனால் இதுபற்றி அறியாமல் வெளியூரில் இருந்து சிலர் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர்.
இதையொட்டி பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகைய்யா ஆகியோர் பவானி கூடுதுறை, லட்சுமி நகர், காவிரி பாலம், பெருமாள் மலை அருகே உள்ள மங்களகிரி படித்துறை ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடியில் காவிரிக்கரையில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கும் பொதுமக்கள் வந்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பார்கள். தடை காரணமாக இங்கும் பொதுமக்களும், பக்தர்களும் நேற்று அனுமதிக்கப்படவில்லை.
மேலும் கோவில்கள் அனைத்தும் பூட்டப்பட்டு இருக்கிறது. இதனால் கோவில் பகுதிகள் காவிரி கரைகள், படித்துறைகள், பரிகாரம் செய்யும் இடங்கள் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் காவிரி செல்லும் வழி தடங்கள், புதிய பஸ் நிலையம், நுழைவு பாலம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணிகளிலும், தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டனர் இதேபோல் மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடியிலும் வெளியூரில் இருந்து வருபவர்கள் சோதனையிடப்பட்டனர். இதில் கோவிலுக்கு வந்தவர்கள் தவிர மற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை சொக்கநாத சாமி காவிரிக்கரை மற்றும் சிங்கம்பேட்டை கேட் விநாயகர் கோவில் காவிரி கரை உள்ளிட்ட கரையோரப் பகுதியில் நேற்று தடையை மீறி சில பொதுமக்கள் நீராடுவதும் தர்ப்பணம் செய்வதும் நடைபெற்றது. மேலும் காவிரி கரையோரத்தில் உள்ள குளிக்கும் இடங்களில் ஆங்காங்கே பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
குறிப்பாக சிங்கம்பேட்டை கேட் விநாயகர் கோவில் காவிரிக்கரை பகுதியில் நள்ளிரவு முதலே பொதுமக்கள் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். ஒரு சிலர் காவிரிக்கரையில் அனுமதியில்லை என நினைத்து முன்னேற்பாடு இல்லாமல் வந்ததால் மற்றவர்கள் திதி கொடுப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் சென்றனர். மதியம் 12 மணிக்கு மேல் காவிரிக்கரைகள் வெறிச்சோடின. ஊஞ்சலூர் பகுதிகளில் நேற்று ஆடி அமாவாசையையொட்டி காவிரி ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கோ, திதி கொடுக்கவோ அனுமதிக்கப்படவில்லை. 

Next Story