மாமல்லபுரம் அருகே பெண் அடித்துக்கொலை; பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது


மாமல்லபுரம் அருகே பெண் அடித்துக்கொலை; பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய கணவர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2021 2:29 PM IST (Updated: 9 Aug 2021 2:29 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் அருகே கிரிக்கெட் மட்டையால் மனைவியை அடித்துக்கொலை செய்துவிட்டு பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

துன்புறுத்தி வந்தார்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 42). இவரது மனைவி ஆனந்தி (31) இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (16) என்ற மகளும், தமிழ்செல்வன் (14) என்ற மகனும் உள்ளனர். ஆனந்தி, ரவிக்குமாரின் தூரத்து உறவுமுறை அக்காள் மகள் ஆவார். இருவரும் ஒரே ஊரை (பையனூர்) சேர்ந்தவர்கள்.ரவிக்குமார் பையனூரில் அம்பேத்கர் சிலை எதிரில் உள்ள தெருவில் தையல் கடை நடத்தி வருகிறார். ஆனந்தி பையனூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உணவகத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி வேலைக்கு சென்று வருவதால் சந்தேக புத்தி கொண்ட ரவிக்குமார் அடிக்கடி அவரை சந்தேகப்பட்டு மது குடித்துவிட்டு வந்து அடித்து துன்புறுத்தி உள்ளார்.

பாம்பு கடித்து இறந்து விட்டார்
நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் வழக்கம்போல் தனது மகன் முன்னிலையில் மனைவியை அடித்து புன்புறுத்தி உள்ளார். அப்பா, அம்மாவை அடிக்காதீர்கள் என மகன் கதறவே அடிப்பதை நிறுத்திவிட்டு ரவிக்குமார் தூங்க சென்றுவிட்டார். பிறகு மகள், மகன் இருவரும் குடிசை வீட்டில் ஒரு அறையில் தூங்கிவிட்டனர்.நேற்று காலை அவரது குடிசை வீட்டுக்கு தையல் துணி வாங்க வந்தவர்கள் கதவை தட்டியபோது, ரவிக்குமார் கதவை திறந்து தனது மனைவியை பாம்பு அல்லது விஷ பூச்சி ஏதோ கடித்து அவர் இறந்து விட்டார் என்று அவர்களிடம் கூறி அழுதுள்ளார்.

கைது
பின்னர் அருகில் மற்றொரு தெருவில் வசித்து வந்த ஆனந்தியின் தாய் தேவகிக்கு மகள் இறந்த தகவல் பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. பதறி அடித்து கொண்டு வந்த அவர் தனது மகள் தலையில் அதிக காயத்துடன் ரத்தம் பீறிட்ட நிலையில் கிடந்ததை கண்டு சந்தேகமடைந்து அலறி துடித்து அழுதார். இது குறித்து மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி மற்றும் போலீசார் அங்கு வந்து அழுது நாடகமாடிய ரவிக்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். மனைவியை பாம்போ, விஷ பூச்சியோ கடித்து இறக்கவில்லை என்றும், இரவு தூங்கி கொண்டிருந்த மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் ரவிக்குமாரை கைது செய்தனர்.

தண்டனை வழங்க வேண்டும்
பலமுறை தனது மகளை ரவிக்குமார் அடித்து கொடுமை படுத்தியுள்ளார் என்றும், அவரால் ரத்த காயத்திற்கு தனது மகள் பலமுறை உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று அவரது தாய் தேவகி போலீசாரிடம் விசாரணையின் போது தெரிவித்து, அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்று கதறி அழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க செய்தது.

பின்னர் போலீசார் ரவிகுமார் வீட்டில் கொலைக்கு பயன்படுத்திய கிரிக்கெட் மட்டையை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். முன்னதாக மனைவியை கொலை செய்துவிட்டு விடிய, விடிய அவரது உடல் அருகே இருந்து விட்டு காலையில் பாம்போ, விஷபூச்சியோ கடித்துவிட்டது என கூறி அந்த ஊர் மக்களை ஏமாற்றிய அவரின் குட்டு வெளிப்பட்டதால் அவர் அங்கிருந்து தப்பி ஓட முடியாத அளவுக்கு அந்த ஊர் மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். போலீசார் வந்ததும் அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் ஆனந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story