அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி பகுதியில் கடைகள் மாலை 5 மணிக்கு அடைப்பு
அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி பகுதியில் மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
ஈரோடு
அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி பகுதியில் மாலை 5 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டன.
அந்தியூர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாைவ கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நேற்று முதல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பால், மருந்தகம் தவிர மளிகை, காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் அதன்பின்னர் அடைக்கப்படும் என்றும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அந்தியூரில் மாலை 5 மணி அளவில் மளிகை கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், நகைக்கடை, துணிக்கடை உள்பட பல்வேறு கடைகள் மூடப்பட்டன. ஓட்டல்களிலும் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. வழக்கம்போல பால் பூத், மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தன.
ஒலிபெருக்கி மூலம்...
மேலும் அந்தியூர் போக்குவரத்து போலீசார் ரோந்து சென்று ஒலிபெருக்கி மூலம், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும் என கூறினார்கள். இதேபோல் அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல் ஆகிய பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டன. அந்தியூர் திங்கட்கிழமை வாரச்சந்தை வழக்கம்போல் கூடி இரவு 7 மணி வரை நடந்தது.
பெருந்துறை
பெருந்துறை நகரில் முக்கிய ரோடுகளில் உள்ள மளிகை கடைகள், ஜவுளிக் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், பர்னிச்சர் கடைகள், சைக்கிள் கடைகள், நகைக் கடைகள், செருப்புக் கடைகள் ஆகியவை நேற்று மாலை 5 மணிக்கு முன்னதாகவே அடைக்கப்பட்டன.
மேலும் பெருந்துறை போலீசார் நகர் முழுவதும் ரோந்து சுற்றி வந்து ஒலிபெருக்கி மூலம், கடைகளை சரியான நேரத்துக்குள் அடைக்க வேண்டும் என்று அறிவிப்பு செய்தனர். இருப்பினும், போலீசாரின் கண்காணிப்பு அதிகம் இல்லாத, பெருந்துறையைச் சுற்றியுள்ள ஒதுக்குப்புறங்களான, சீனாபுரம், துடுப்பதி, நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், விஜயமங்கலம் ஆகிய ஊர்களில் மாலை 5 மணியை தாண்டியும் ஒரு சில மளிகைக் கடைகள் திறந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுமுடி
கொடுமுடி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பால், மருந்தகங்கள் தவிர ஏனைய காய்கறி கடைகள் மளிகை, பேக்கரிகள் ஆகிய கடைகள் மாலை 5 மணிக்கு அடைக்கப்பட்டன. டீக்கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 வரை பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. யாரும் கடையில் டீ அருந்த அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீதம் நபர்கள் அமர்ந்து சாப்பிடவும் மாலை 5 மணிக்கு மேல் 9 மணிவரை பார்சல் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டன.
Related Tags :
Next Story