குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக 2,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்- போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக 2 ஆயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதலாக 2 ஆயிரத்து 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.
ரோந்து வாகனம்
குற்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளுக்கும், அவசர தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும் போலீசார் உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு செல்லும் வகையில் போலீஸ் துறை சார்பில் மோட்டார் சைக்கிள் ரோந்து வாகன வசதி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு டவுன் உள்கோட்டத்தில் 15 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 4 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுவார்கள்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஈரோட்டில் குற்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளுக்கு போலீசார் உடனுக்குடன் செல்வதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும், அவசர அழைப்பு வந்ததும் சம்பவ இடத்துக்கு போலீசார் உடனடியாக செல்ல பயனுள்ளதாக அமையும். இந்த ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கண்காணிப்பு கேமரா, வாக்கி டாக்கி போன்றவை வழங்கப்பட்டு உள்ளது. ரோந்து சுற்றி வரும் போலீசாரின் ஒளிரும் ஆடையிலேயே தொலைபேசி எண்ணும் அச்சிடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் அந்த எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து நடவடிக்கைகளும் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. மாலை 5 மணிக்குள் கடை அடைப்பது தொடர்பாக வணிகர் சங்கத்தினருடன் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முக கவசம் அணியாதவர்கள் மீது 24 ஆயிரத்து 844 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 2 ஆயிரம் வழக்குகளும், பொது இடங்களில் அனுமதியின்றி கூடியதாக 125 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு கேமராக்கள்
ஈரோடு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் நிதி பங்களிப்புடன் 8 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கூடுதலாக 2 ஆயிரத்து 500 கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல்கட்டமாக வருகிற 30-ந் தேதிக்குள் 250 இடங்களில் 1,200 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.
இந்த கேமராக்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் பஸ் நிலையம், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன் கார்த்திக்குமார், ஜானகி ராமன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ உள்பட போலீசார் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story