தாளவாடி அருகே சிறுத்தை மீண்டும் அட்டகாசம்; ஆட்டை அடித்துக்கொன்றது
தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை ஆட்டை அடித்துக்கொன்றது.
தாளவாடி
தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை ஆட்டை அடித்துக்கொன்றது.
கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி, வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தைகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலிகள் அவ்வப்போது அருகே உள்ள கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. சமீபத்தில் மல்குத்திபுரம், பீம்ராஜ்நகர், தொட்டகாஜனூர், சூசைபுரம் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திகனாரை கிராமத்துக்குள் புகுந்து சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்தது. அதன் விவரம் வருமாறு:-
ஆடு இறந்து கிடந்தது
தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் பங்காரு (வயது 38). விவசாயி. இவருக்கு கிராமத்தையொட்டி தோட்டம் உள்ளது. இவர் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கால்நடைகளை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் மாடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பங்காரு திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அங்கு ஆடு ஒன்று கழுத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சிறுத்தை கொன்றது
ஆட்டின் அருகே சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்தது. வனப்பகுதியில் இருந்து நள்ளிரவு வெளியேறிய சிறுத்தை பங்காருவின் கொட்டகைக்குள் புகுந்துள்ளது. பின்னர் அங்கு கட்டப்பட்டிருந்த ஒரு ஆட்டை கடித்து குதறி கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் நேற்று தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு வந்து பார்த்தனர். சிறுத்தையின் கால்தடத்தை வைத்து ஆட்டை அடித்துக்கொன்றது சிறுத்தைதான் என்பதை உறுதி செய்தனர். சிறுத்தை ஆட்டை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story