நிவாரணம் வழங்கிட கோரி கோவில் பஜனை இசைக்கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தொழில் நலிவடைந்ததால் நிவாரணம் வழங்கிட கோரி கோவில் பஜனை இசைக்கலைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த வில்லிசைப்பாட்டுக் கலைஞர் எம்.பழனி தலைமையில் கோவில் பஜனை இசைக்கலைஞர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அமல்படுத்திய கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகம் முழுவதும் வார இறுதிநாட்களில் கோவில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் திருவிழாக்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பஜனை இசைக்கலைஞர்கள் தாங்கள் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். வேறு எந்தத் தொழிலிலும் தங்களுக்கு அனுபவம் கிடையாது என்பதால் அரசு சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சிகளையேனும் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்றும், தொழில் நலிவடைந்து விட்டதால் அரசு சார்பில், நிவாரணம் வழங்கி உதவிடுமாறும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
முன்னதாக இசைக்கருவிகளை இசைத்து கொண்டே வந்த கலைஞர்கள் கலெக்டர் அலுவலக குறைதீர்க்கும் கூட்ட அரங்கு முன்பாக அமர்ந்து பஜனையும் நடத்தினார்கள். இந்த நிலையில் மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர், இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story






