1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில்6 பேருக்கு ஆயுள் தண்டனை- கோபி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு கோபி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
கடத்தூர்
1,800 ரூபாய் கடன் தகராறில் வாலிபரை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு கோபி கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.
கூலி தொழிலாளி
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் மில்மேடு அம்மன்நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களுடைய மகன் செந்தில்குமார் (வயது 34). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி இந்துமதி. இவர்களுக்கு குழந்தை இல்லை.
செந்தில்குமார் கூலி வேலைக்கு சென்று வந்ததுடன், தாய் ராசாத்தி நடத்தி வந்த இட்லி கடை வியாபாரத்துக்கும் உதவியாய் இருந்து வந்தார்.
செந்தில்குமாரின் பக்கத்து வீட்டுக்காரர் சின்ராஜ் (51). இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு செந்தில்குமார் 1,800 ரூபாயை கடனாக கொடுத்து உள்ளார்.
தகராறு
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி செந்தில்குமார் சின்ராஜிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானம் செய்துவைத்துள்ளார்கள். அப்போது சின்ராஜ் தான் கொடுக்கவேண்டிய பணத்தை கோவிலில் வைத்துவிடுவதாகவும், அதை வேண்டுமானால் செந்தில்குமார் எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன்பின்னர் செந்தில்குமாரும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.
கத்திக்குத்து
இந்தநிலையில் அன்று இரவு செந்தில்குமார், தாய் ராசாத்தி ஆகியோர் வீட்டில் இருந்தார்கள். அப்போது சின்ராஜ், அவருடைய மனைவி பழனியம்மாள் என்கிற கண்ணம்மாள் (50), மகள் ரம்யா (30), மருமகன் பால்ராஜ் (34) மற்றும் இவர்களுடைய உறவினர்கள் பெரியூர் கட்டபொம்மன் வீதியை சேர்ந்த சுதாகர் (37). இவருைடய தம்பி தர்மராஜ் (34) ஆகியோர் அங்கு வந்தார்கள். பின்னர் இவர்கள் 6 பேரும் சேர்ந்து செந்தில்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சின்ராஜ், பழனியம்மாள், ரம்யா, பால்ராஜ், சுதாகர், தர்மராஜ் ஆகியோரை கைது செய்தார்கள். மேலும் இவர்கள் மீது கோபி 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கில் நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, செந்தில்குமாரை கொலை செய்த குற்றத்துக்காக சின்ராஜ், பால்ராஜ், தர்மராஜ், சுதாகர், ரம்யா, பழனியம்மாள் ஆகிய 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் மேலும் 147-வது பிரிவின் கீழ் தலா 1000 ரூபாயும், 148-வது பிரிவின் கீழ் சின்ராஜ், பால்ராஜ், சுதாகர், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 2 ஆயிரம் ரூபாயும், 342-வது பிரிவின் கீழ் பழனியம்மாள், ரம்யா ஆகியோருக்கு தலா 1000 ரூபாயும், 506-பிரிவின் கீழ் சின்ராஜூக்கு 1000 ரூபாயும், 302 மற்றும் 34-வது பிரிவின் கீழ் 6 பேருக்கும் தலா 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தார்.
1800 ரூபாய் கடன் தகராறில், வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது கோபி கோர்ட்டில் நேற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனகோட்டிராம் ஆஜர் ஆனார்.
Related Tags :
Next Story