ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்


ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம்- மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2021 5:44 AM IST (Updated: 11 Aug 2021 5:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு சோலாரில் புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சோலார் பகுதியில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. அங்கு கரூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களின் பஸ்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சு.முத்துசாமி அங்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தநிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்தின் மாதிரி வரைப்படம் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது. மேலும், பஸ் நிலையம் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்து தெரிவிக்கலாம்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு சோலார் புஞ்சை லக்காபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு 46 பஸ்கள் நிறுத்தப்படும் வகையில் 4 வரிசை கொண்ட மேடைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், அலுவலகம், நிர்வாக அலுவலகம், ஓட்டல்கள் அமைக்க இடவசதி, ஆட்டோ, கால்டாக்சிகளை நிறுத்துவதற்கான இடவசதி, கழிப்பறை வசதி ஆகியன அமைக்கப்பட உள்ளன.
பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்வதற்காக தனிப்பாதை அமைக்கப்படுகிறது. அதன் வழியாக வேறு எந்த வாகனங்களும் செல்லக்கூடாது. எனவே இந்த புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான திட்டம் தொடர்பாக 94890 92000 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது commr.erode@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ கருத்துக்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story