கோவையில் நடமாடும் வாகனம் மூலம் 1,345 மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி
கோவையில் நடமாடும் வாகனம் மூலம் 1,345 மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவடட்த்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இதனால் முகாம்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று தடுப்பூசி போடமுடியாமல் அவதிப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சிறப்பு நடமாடும் வாகனங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்த வாகனங்கள் மூலமாக தடுப்பூசி முகாம்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு அதிகாரிகள் கூறியதாவது:-
நடமாடும் வாகனங்கள் மூலம் சுகாதார துறையுடன் இணைந்து 1,345 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு ஏற்ப எந்த பகுதிகளுக்கு அவர்களால் வரமுடியும் என்பதை தெரிந்து கொண்டு அங்கு இந்த நடமாடும் மொபைல் வாகனம் மூலம் சென்று தடுப்பூசி போடப்படுகிறது.
இதற்காக 120 டோஸ் தடுப்பூசியானது மாவட்ட சுகாதார துறை சார்பில் ஒதுக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 40 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் இதுவரை 9,300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story