கோவில்களில் ஆடிப்பூர விழா: நடைகள் சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று வணங்கிய பக்தர்கள்


கோவில்களில் ஆடிப்பூர விழா: நடைகள் சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று வணங்கிய பக்தர்கள்
x

கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. நடைகள் சாத்தப்பட்டதால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார்கள்.

ஈரோடு
கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. நடைகள் சாத்தப்பட்டதால் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார்கள். 
ஆடிப்பூர விழா
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக ஆடி மாதம் கோவில்களில் நடைபெறும் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆடிப்பூர விழாவுக்கும் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பண்ணாரி, கொடுமுடி, பவானி, கோபி சாரதா மாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், அமரபணீஸ்வரர், பச்சைமலை சுப்பிரமணிய சாமி, பவளமலை முத்துக்குமாரசாமி கோவில்களின் நடை சாத்தப்பட்டன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சிறிய கோவில்களில் மட்டும் நடை திறக்கப்பட்டு இருந்தன. பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். 
பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், வழக்கமாக ஆடிப்பூரத்தன்று நடைபெறும் பூஜைகள் தடையின்றி நடந்தன. 
பண்ணாரி அம்மன்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் வழக்கமாக ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் கோவில் நடை சாத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தார்கள். அவர்கள் பூட்டப்பட்ட கதவு முன்பு வெளியே நின்று தரிசனம் செய்தார்கள். சிலர் குண்டம் அமைக்கப்படும் இடத்தில் தேங்காய், பழம் படையலிட்டு வணங்கினார்கள். 
கோபி
கோபி டவுன் அக்ரகாரம், ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. அம்மனுக்கு வளையல்கள் வைத்து பூஜை நடந்தது. விசாலாட்சி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 
இதேபோல் கோபி வடக்கு வீதியில் உள்ள பெரம்பலூர் முத்துமாரி அம்மனுக்கு ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 
கோபி மாதேஸ்வரர் கோவிலிலும் ஆடிப்பூர வழிபாடுகள் நடைபெற்றன. கோபி வேலுமணி நகரிலுள்ள சக்தி விநாயகர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி துர்க்கை அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 
கொடுமுடி
கொடுமுடியில் மும்மூர்த்திகள் வாசம் செய்யும் மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக நேற்று நடைசாத்தப்பட்டு இருந்தது. பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனினும் பக்தர்கள் காவிரியில் புனித நீராடி கோவில் கோபுரத்துக்கு முன்பு சூடம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு, வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஆட்சியம்மன்
கொடுமுடி கோவிலுக்குள் அனுமதி இல்லை என்றாலும் பரிகாரம் செய்வதற்காக வெளியூரிலிருந்து நேற்று கார்களிலும், வேன்களிலும் பொதுமக்கள் வந்திருந்தனர். இதேபோல் கொடுமுடி அருகே உள்ள ஏமகண்டனூர் ஆட்சி அம்மன் கோவிலிலும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. மேலும் சிறப்பு வேள்வி பூஜை பூரணாம்பாள் தலைமையில் நடைபெற்றது. 

Next Story