ஈரோடு மாநகராட்சியில் வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி மீண்டும் தொடங்கியது; கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை
ஈரோடு மாநகராட்சியில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகமானது. அதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிப்பது பெரும் சவாலாக மாறிஇருந்தது. அப்போது ஈரோடு மாநகராட்சி சார்பில் 300 அதிகாரிகள் மற்றும் 1,200 தன்னார்வலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவு உள்ளதா என ஆய்வு நடத்தினார்கள். அதில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறிய முடிந்ததால், தொற்று மேலும் பரவாமல் தடுக்க முடிந்தது.
கள ஆய்வு
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 150-க்கும் அதிகமாக உள்ளது. எனவே கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மீண்டும் வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
வீடு, வீடாக சென்று கண்காணிப்பதற்காக 300 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்காக தனித்தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. வாரம் ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் போன்றவை உள்ளதா என்ற விவரங்கள் சேகரிக்கப்படும். இதேபோல் மருந்து கடைகளில் சளி, காய்ச்சலுக்கு மாத்திரைகள் வாங்கப்பட்டு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்படும். அதில் கொரோனா அறிகுறி உள்ளவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்தும் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story