சிறுபான்மையினர் உரிமைகளை பாதிக்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்


சிறுபான்மையினர் உரிமைகளை பாதிக்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார்
x
தினத்தந்தி 12 Aug 2021 4:04 PM IST (Updated: 12 Aug 2021 4:04 PM IST)
t-max-icont-min-icon

சிறுபான்மையினர் உரிமைகளை பாதிக்கும் திட்டங்களை மு.க.ஸ்டாலின் அனுமதிக்கமாட்டார் என்று சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக கருத்துகேட்பு மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுபான்மையினர் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்கும், அரசாங்கத்தால் செயல்படுத்திவரும் திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை பார்ப்பது இந்த ஆணையத்தின் செயல்பாடாகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு நேரத்திலும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட கூடிய எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிக்கமாட்டார். அந்த வகையில் அவருக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்.

அறநிலையத்துறையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை அனைத்து மதத்தினரும் பாராட்டுகிறார்கள். ஆகவே, நாம் எந்த மதம் என்பதைவிட அனைவரும் தமிழன் என்று அடையாளம் காண்போம், தமிழர்களாக ஒற்றுமையுடன் இருப்போம். தமிழர்களாய் எழுந்து நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஆணையத்தின் உறுப்பினர் செயலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், செல்வபெருந்தகை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுலவர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story