தாளவாடி மலைப்பகுதி கிராமம் ராமரணையில் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் துடைப்பங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க ஏற்பாடு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நடவடிக்கையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
தாளவாடி மலைப்பகுதி ராமரணை கிராம மக்கள் உற்பத்தி செய்யும் துடைப்பங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்பாடு செய்ததால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு
தாளவாடி மலைப்பகுதி ராமரணை கிராம மக்கள் உற்பத்தி செய்யும் துடைப்பங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஏற்பாடு செய்ததால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
ராமரணை கிராமம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் ராமரணை என்ற கிராமம் அமைந்து உள்ளது. முறையான போக்குவரத்து வசதிகள் கூட இல்லாத இந்த கிராமத்தில் பழங்குடியின மக்கள் 22 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாய கூலித்தொழில் இல்லாத நேரங்களில் அவர்களின் வருமானத்துக்கு துடைப்பம் தயாரித்து வருகிறார்கள்.
ராமரணை கிராமத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை வனத்தில் இருந்து துடைப்பத்துக்கான மூலப்பொருட்களை சுமந்து வருகிறார்கள். இங்கு அதை காய வைத்து பதப்படுத்தி துடைப்பங்களாக செய்து விற்பனைசெய்து வருகிறார்கள்.
கலெக்டர் பார்வையிட்டார்
இந்த கிராமத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். ராமரணை மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் தொழில் குறித்து கேட்டு அறிந்த கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பழங்குடியின மக்கள் துடைப்பம் செய்யும் தொழிலில் ஈடுபடுவதையும் பார்த்து, ஆர்வமாக தெரிந்து கொண்டார்.
அப்போது மலைக்கிராம மக்கள் துடைப்பங்களை ஒரு கிலோவுக்கு ரூ.20 என்ற விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பழங்குடியின மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வனப்பகுதிகளில் இருந்து உயிரை பணயம் வைத்து துடைப்பத்துக்கான மூலப்பொருட்களை எடுத்து வருகிறார்கள். அவர்கள் அதை காயவைத்து பதப்படுத்தி துடைப்பமாக செய்த பிறகு, விற்பனை செய்யும் விலை மிக குறைவாக இருப்பதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கருதினார்.
இதுபற்றி உரிய விசாரணை நடத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது இடைத்தரகர்கள் துடைப்பங்களை ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் பழங்குடியின மக்களிடம் இருந்து வாங்கி, அதை ரூ.60 வரை விலைக்கு விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது.
கூடுதல் விலை
அதைத்தொடர்ந்து பழங்குடியின மக்களின் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்க கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சிறப்பு நடவடிக்கை எடுத்தார். ராமரணை பகுதி மகளிர் சுயஉதவிக்குழுவில் உள்ள 17 பெண்களுக்கு துடைப்பம் தரம் மேம்பாட்டுபயிற்சி மற்றும் உரிய விலைக்கு விற்பனை செய்யும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஈரோட்டில் இருந்து பயிற்சியாளர்கள் ராமரணை மலைக்கிராமத்தில் 3 நாட்கள் தங்கி பயிற்சி அளித்தனர். மேலும் மகளிர் குழுவினருக்கு ரூ.75 ஆயிரம் நிதிஉதவி மகளிர் திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்பட்டது.
இதையடுத்து தற்போது ஒரு கிலோ துடைப்பம் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் துடைப்பம் செய்யும் பொதுமக்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் தயாரிக்கப்படும் துடைப்பங்களை மகளிர் திட்டத்தின் வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் சந்தைப்படுத்தவும் கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இந்த நடவடிக்கைகள் ராமரணை பழங்குடியின மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாராட்டு
மலைக்கிராமத்தில் அடர்ந்த வனத்தின் ஓரத்தில் யாரும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்து வந்த மக்களின் நிலையை கண்டு வருந்தி, அவர்களின் மேம்பாட்டுக்காக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எடுத்த நடவடிக்கைக்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த திட்டத்தை தாளவாடி மலையில் உள்ள ஆசனூர், கேர்மாளம், திங்களூர் ஊராட்சிகளில் உள்ள 8 பழங்குடியினர் பகுதிகளிலும் விரிவுபடுத்த மகளிர் திட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story