கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவியே கொன்று உடலை எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவியே கொன்று உடலை எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
படப்பை,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 44), இவருடைய மனைவி விமலாராணி (வயது 35). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 14 வயதில் மகன் உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் சொந்தமாக வீடு கட்டி 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர். தங்கவேல் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி தங்கவேலின் தந்தை திருமலையாண்டி (வயது 70), சகோதரர் சக்திவேல் (47) ஆகியோர் தங்கவேலின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது தங்கவேலின் மனைவி போனை எடுத்து சரியான பதில் கூறாமல் வைத்து விட்டார்.
பின்னர் சக்திவேலின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த தங்கவேலின் தந்தை திருமலையாண்டி, மகன் சக்திவேல் மற்றும் உறவினர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள ஆத்தனஞ்சேரி பகுதியில் உள்ள தங்கவேலின் வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டில் மகன் தங்கவேல், மருமகள், பேரன் ஆகியோரை காணவில்லை. இதனை தொடர்ந்து மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் மகன் தங்கவேல், மருமகள், பேரன் ஆகியோர் மாயமாகி விட்டதாக திருமலையாண்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தங்கவேலின் மனைவி விமலாராணி மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸ் விசாரணையில் கள்ளக்காதலை கண்டித்ததால் கணவர் தங்கவேலை கொன்று சேலத்தை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜா என்பவருடன் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே வனப்பகுதியில் உடலை எரித்ததாக விமலாராணி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து விமலா ராணியை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரை படப்பை அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பகுதியை சேர்ந்த நடராஜன் (24), சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த விஜி என்கிற தங்கராசு (26) என்பது தெரியவந்தது.
போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ராஜா சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
Related Tags :
Next Story






