கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு; தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்- ஆர்.டி.ஓ. முன்னிலையில் வாக்கெடுப்பு நடந்தது
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஆர்.டி.ஓ. முன்னிலையில் வாக்கெடுப்பு நடந்தது.
கொடுமுடி
கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தி.மு.க.வை சேர்ந்த துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஆர்.டி.ஓ. முன்னிலையில் வாக்கெடுப்பு நடந்தது.
கொடுமுடி ஒன்றியம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒன்றியத்தில் மொத்தம் 6-வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இதில் 1-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த பழனிச்சாமியும், 2-வது வார்டில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ. பழனிச்சாமியும், 3-வது வார்டில் தி.மு.க.வை சேர்ந்த லட்சுமி ராஜேந்திரனும், 4-வது வார்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பரமசிவமும், 5-வது வார்டில் சுயேச்சையாக தேர்வு செய்யப்பட்ட வளர்மதியும், 6-வது வார்டில் தி.மு.க.வைச் சேர்ந்த பிரீத்தி செந்தில் என்பவரும் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் லட்சுமி ராஜேந்திரன் ஒன்றிய குழு தலைவராகவும், ப்ரீத்தி செந்தில் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
இந்தநிலையில் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் ஆகிய பணியிடங்களை தற்போதைய நிதி நெருக்கடியின் காரணமாக நிரப்ப முடியாது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது. இதற்கு துணைத்தலைவர் ப்ரீத்தி செந்தில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மேலும் ஊராட்சி தலைவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி ஒன்றியக்குழு தலைவர் லட்சுமி ராஜேந்திரன் மற்றும் இதர 4 கவுன்சிலர்கள் சேர்ந்து துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தை கலெக்டரிடமும், ஆர்.டி.ஓ.விடமும் வழங்கினார்கள்.
வாக்கெடுப்பு
இதுகுறித்த பரிசீலனை சிறப்பு கூட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஆர்.டி.ஓ. பிரேமலதா தலைமையில் நேற்று நடைபெற்றது.
அப்போது ஆர்.டி.ஓ. பிரேமலதா நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி, எழுத்து பூர்வமாகவும் உறுப்பினர்களிடையே பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து ஆர்.டி.ஓ. பிரேமலதா கூறும்போது, ‘நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு முடிந்துவிட்டது. இருதரப்பினரின் கருத்துக்கள் மற்றும் சிறப்பு கூட்டத்தின் முழு அறிக்கையும் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர் இதுகுறித்து முடிவு எடுப்பார்’ என்றார்.
போலீஸ் குவிப்பு
முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்ததால் கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
இதையொட்டி பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய குழுத்தலைவரின் தலைமையில் கவுன்சிலர்கள் தி.மு.க.ைவ சேர்ந்த துணைத்தலைவர் மீதே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது கொடுமுடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
Related Tags :
Next Story