ஆடிமாத கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு வழிபாடு- நடை சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்


ஆடிமாத கடைசி வெள்ளி: கோவில்களில் சிறப்பு வழிபாடு- நடை சாத்தப்பட்டு இருந்ததால் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 13 Aug 2021 10:18 PM GMT (Updated: 13 Aug 2021 10:18 PM GMT)

ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள்.

ஈரோடு,
ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள்.
ஆடி கடைசி வெள்ளி
 தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்ததாகும். வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். பக்தர்களும் குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு கோவில்களின் நடை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பக்தர்களும் உள்ளே செல்ல அனுமதியில்லை. இதனால் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை களையிழந்திருந்தது. எனினும் அம்மனுக்கு வழக்கமாக செய்யும் அபிஷேகங்கள் குறைவின்றி நடைபெற்றது. சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு இருந்தது, பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார்கள். 
பண்ணாரி-  கோபி
புகழ்பெற்ற பண்ணாரி கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் தரிசனத்துக்காக நடை திறக்கப்படவில்லை. எனினும் பக்தர்கள் வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்தார்கள். 
கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வந்தார்கள். ஆனால் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால், ஏமாற்றத்துடன் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள். 
இதேபோல் கோபி டவுன் வடக்கு வீதியில் பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவில், அக்ரகாரத்தில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவில், கோபி சாரதா மாரியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலிலும் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
அந்தியூர்- கொடுமுடி
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பழமையான பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.  சந்தனகாப்பு அலங்காரத்தில் பச்சைப் பட்டு உடுத்தி பத்ரகாளியம்மன் காட்சி தந்தார். பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டு, நடை சாத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தார்கள். 
புகழ்பெற்ற கொடுமுடி மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொடுமுடி அருகே உள்ள சென்னசமுத்திரம் மாரியம்மன் கோவில், வடக்குத்தெரு புது மாரியம்மன் கோவில், ஓம் காளியம்மன் கோவில், ஏமகண்டனூர் ஆட்சி அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடைபெற்றன. 
சிவகிரி, சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி, நம்பியூர், அம்மாபேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு இருந்தது. பல கோவில்களில் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு சென்றதை காணமுடிந்தது.

Next Story