படப்பை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு
படப்பை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
படப்பை,
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்ஜாபூர் ராஜ்கார் பகுதியை சேர்ந்தவர் மவுனித்குமார். இவருடைய மகன் அபிநய் (வயது 20). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா படப்பை அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள எம்.சேண்ட் கிரஷரில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். இதே கிரஷரில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் (18) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பிரசாந்த் அருகில் உள்ள தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வந்தார். அப்போது அபிநய் எந்திர கன்வேயர் பெல்ட்டுக்கு கீழ் உள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்து கிடந்தார். இதை பார்த்த பிரசாந்த் அவரை தூக்க அருகில் சென்ற போது மின்கசிவு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தொழிலாளர்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு ஓடிச்சென்று மற்ற தொழிலாளர்களை அழைத்து வந்தார். பின்னர் மின் இணைப்பை துண்டித்து அபிநய்யை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிநய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story