சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு கொரோனா
சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 6 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு செய்யப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
சோழிங்கநல்லூர்,
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஒரு நபர் அல்லது ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அல்லது ஒரே இடத்துக்கு தொடர்புடையவர்கள் என குழுக்களுக்கு (கிளஸ்டர்ஸ்) கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் சென்னை கீழ்ப்பாக்கம், வர்தமான் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 குழந்தைகள் ஆகும்.
இதையடுத்து குறைவான தொற்று பாதிப்புக்கு ஆளானவர்கள் வீட்டு கண்காணிப்பிலும், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 23 பேர் பாதிக்கப்பட்டதால் அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் தொடர் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தவும் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த அடுக்குமாடி குடியிருப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு, அங்கு எடுக்கப்பட வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது அவருடன் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் சிம்ரன்ஜீத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story