பாசன கால்வாய் சீரமைக்கும் பணியின்போது மின்கம்பம் திடீரென முறிந்தது மின்சாரம் தாக்கி 5 பெண்கள் காயம்
தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்தில் பாசன கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கம்பம் முறிந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 5 பெண்கள் காயம் அடைந்தனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்துள்ள கண்ணாரிருப்பு ஊராட்சியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் 74 பெண்கள் உள்பட 76 பேர் ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் பாசன வாய்க்காலை சீரமைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள வயல் ஒன்றில் இருந்த மின் கம்பம் உடைந்து விழுந்தது.
இதைத்தொடர்ந்து அந்த மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் பாசன கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகமுநாச்சியார் (வயது45) என்ற பெண்ணின் மீது விழுந்தது. இதைதொடர்ந்து அவரை மின்சாரம் தாக்கியதுடன் அருகே இருந்த ஈஸ்வரி (49), மாரிமுத்து (30), ஜானகி (40), வரலட்சுமி (40) ஆகிய 5 பெண்களையும் மின்சாரம் தாக்கியது. அப்போது திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் தாக்கியவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைதொடர்ந்து 5 பெண்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீரபத்திரன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உமா மகேஸ்வரி, ரத்தினவேலு, மற்றும் வளர்ச்சித்துறை அதிகாரிகள் அங்கு சென்று காயமடைந்தவர்களை பார்வையிட்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணாரிருப்பு ஊராட்சி தலைவர் புவனேஸ்வரி கண்ணன் கூறியதாவது:- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பாசன வாய்க்கால் சீரமைப்பு பணி செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன வாய்க்கால் சீரமைப்பு பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று காலை 10½ மணி அளவில் திடீரென்று அவர்கள் வேலை பார்த்த இடத்தின் அருகில் இருந்த மின் கம்பம் உடைந்து விழுந்தது. இதில் 5 பெண்களை மின்சாரம் தாக்கியது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 5 பேரும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story