கேரளாவில் கார் மோதி என்ஜினீயரிங் மாணவன், மாணவி பலி
கேரளாவில் கார் மோதி என்ஜினீயரிங் மாணவன், மாணவி பலி மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்ற போது பரிதாபம்.
திருவனந்தபுரம்,
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 10 பேர் 5 மோட்டார் சைக்கிள்களில் நேற்று முன்தினம் காலை சுற்றுலா தலமான தென்மலைக்கு புறப்பட்டனர். தென்மலை வனப் பகுதியை சுற்றி பார்த்த பிறகு இரவு 9.30 மணிக்கு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். அவர்களில் மாணவர் கோவிந்த் (வயது 20), மாணவி சைதன்யா (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
செங்கமநாடு-சேத்தடி இடையே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவன், மாணவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மாணவன் கோவிந்த் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சைதன்யாவை சக மாணவ, மாணவிகள் மீட்டு கொட்டாரக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சைதன்யா நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்களும் கொட்டாரக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் பலியான கோவிந்த் கொல்லம் மாவட்டம் கேரளபுரத்தை சேர்ந்தவர் என்பதும், சைதன்யா காசர்கோடு மாவட்டம் காஞ்சன்காட்டை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுலா சென்ற போது மாணவன், மாணவி பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story