பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் ஈரோடு விவசாயிகள் வரவேற்பு
பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வேளாண்மை பட்ஜெட்டில் அறிவித்ததற்கு ஈரோடு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
ஈரோடு
பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று வேளாண்மை பட்ஜெட்டில் அறிவித்ததற்கு ஈரோடு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.
மஞ்சள் ஆராய்ச்சி நிலையம்
ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் அதிக அளவில் மஞ்சள் பயிர்செய்யும் மாவட்டமாக உள்ளது. இதனால் ஈரோட்டுக்கு மஞ்சள் மாநகரம் என்ற பெயரும் உண்டு. இங்கு மஞ்சள் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும்.
மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஈரோடு மாவட்ட மஞ்சள் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மஞ்சள் விவசாயி
மஞ்சள் விவசாயிகள் சார்பில் கோபி காசிபாளையம் காந்திநகர் வடக்கு தோட்டத்தை சேர்ந்த விவசாயி எம்.கே.முருகேசன் என்பவர் கூறியதாவது:-
விவசாயிகளுக்காக தமிழக அரசு தனியாக பட்ஜெட் போட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மஞ்சள் பிரதான பயிராகும். பவானிசாகர் அணையில் இருந்து தவறாமல் தண்ணீர் கிடைத்தாலும், தற்போதைய கூலி ஆட்கள் பற்றாக்குறையை போக்க விவசாயிகள் நீண்ட கால பயிர்களை தேர்ந்து எடுக்கிறோம். அப்படி நாங்கள் தேர்ந்து எடுக்கும் பயிர்களில் முதன்மையானது மஞ்சள்தான். ஏன் என்றால், மஞ்சள் விலை குறைந்தால் இருப்பு வைத்து விலை அதிகரிக்கும்போது விற்பனை செய்ய முடியும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் விலை கடுமையான வீழ்ச்சி, மஞ்சள் விவசாயத்தில் மேம்பாடு இல்லை என்ற பல்வேறு காரணங்களால் மஞ்சள் விவசாயத்தையே பலரும் கைவிட்டு வருகிறார்கள். நான் 15 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்து வந்த நிலையில் தற்போது வெறும் 7 ஏக்கராக அது குறைந்து உள்ளது.
இந்தநிலையில் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆறுதலாக உள்ளது. பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டால், ஈரோடு விவசாயிகள் வேளாண் விஞ்ஞானிகளுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கும். நமது மண்ணுக்கு ஏற்ற நல்ல மஞ்சள் விதைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது பிற மாநிலங்களில் அதிக விளைச்சல் அளிக்கும் மஞ்சள் உள்ளது. அதுபோன்று நமது மண்ணில் தரமான அதிக விளைச்சல் அளிக்கும் மஞ்சள் விதைகளை உருவாக்க முடியும். இதன் மூலம் மஞ்சள் விவசாயத்தில் இருந்து வெளியேறிய விவசாயிகளும் மீண்டும் மஞ்சளை நோக்கி வருவார்கள். பரப்பளவு அதிகரிக்கும். மஞ்சளில் குர்க்குமின்(மஞ்சளின் தன்மை) அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் சந்தையில் ஈரோட்டு மஞ்சளின் விலை அதிகரிக்கும். எனவே மஞ்சள் ஆராய்ச்சி நிலையத்தை வரவேற்கிறோம். இதுவரை எங்கள் விவசாயத்துக்கு தண்ணீர் தந்த பவானிசாகர், இனி மஞ்சள் விதைகளையும் அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சள் வணிகர்
ஈரோடு மஞ்சள் வணிகர் வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது:-
தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவில் மிகவும் தரமான மஞ்சள் என்றால் அது ஈரோடு மஞ்சள்தான். எனவேதான் ஈரோட்டு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்று இருக்கிறோம். ஆனால், மஞ்சள் விளைச்சலை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் இல்லாததால், விவசாயிகள் இந்த தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அதே நேரம் பிற மாநிலங்கள் தரமான விதை உற்பத்தி மூலம் மஞ்சள் விளைச்சலை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் அதிக விளைச்சல் தரும் மஞ்சள் விதைகளை அரசே வழங்குகிறது. உண்மையில் ஈரோடு மஞ்சளின் தரம் மற்ற மஞ்சளில் இருக்காது. எனவே ஈரோடு மாவட்டத்துக்கு பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளி வந்து இருப்பது வரவேற்கத்தக்கது. மிகவும் அவசியமானதும் கூட. தமிழகத்தில் முதன் முதலாக போடப்பட்ட வேளாண் பட்ஜெட்டில், ஈரோடு விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயமாக இது உள்ளது.
மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதன் மூலம் தரமான மஞ்சள் விதைகள் உருவாக்கப்படும் என்பது சிறப்புக்கு உரியது. இந்த பணிகளை உடனடியாக அரசு தொடங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக உள்ளது. மஞ்சளில் குர்க்குமின் அதிகரிக்கச்செய்வது. கட்டுப்படியாகும் விலை கிடைக்கச்செய்வது உள்ளிட்ட பல பணிகள் உள்ளன. தரமான மஞ்சள் உற்பத்தி செய்வது மட்டுமின்றி, ஈரோட்டு மஞ்சளின் சிறப்புகளை பிற மாநிலங்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தவும் அரசு முன்வரவேண்டும். இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும். விவசாயிகளுக்கும், மஞ்சள் விவசாயத்தை சார்ந்து வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story