மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் ஈரோட்டில் கைது- சுதந்திர தினத்தையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமா? போலீஸ் விசாரணை


மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் ஈரோட்டில் கைது- சுதந்திர தினத்தையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 Aug 2021 2:58 AM IST (Updated: 15 Aug 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் சுதந்திர தினத்ததையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு
மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த போலி ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார்கள்.  அவர்கள் சுதந்திர தினத்ததையொட்டி சதி வேலையில் ஈடுபட திட்டமிட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோதனை
ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மீனா, குற்றப்பிரிவு போலீசார் சரவணன் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஈரோடு வழியாக சென்ற ரெயில்களில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது மேற்கு வங்காளத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் சாலிமர் ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும், ரெயிலில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் சோதனை செய்தபோது, ரெயில்வே பைலட் சீருடையில் 2 வாலிபர்கள் இருந்துள்ளனர்.
 அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தாங்கள் 2 பேரும் ரெயில் என்ஜின் டிரைவர்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் அவர்களின்    நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலி அடையாள அட்டை
இதனால் போலீசார் அவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டுள்ளனர். அடையாள      அட்டையை பார்த்த போது           அது போலியானது       என்பது    தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கியதோடு அவர்களின் உடைமைகளை பறிமுதல் செய்து, சோதனையிட்டனர்.
அப்போது பச்சை, சிவப்பு நிறங்களில் ரெயில்வே துறையில் பயன்படுத்தும் கொடிகள், டார்ச் லைட், பெயர் பொறிக்கப்பட்ட பேட்ஜ் உள்ளிட்டவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் மேற்கு வங்காள மாநிலம் முஸ்சிராபாத் அருகே உள்ள ஹரிராம்பூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது வாலிபர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்துல்ரசாக் மகன் எஸ்ராபில்ஷேக் (21) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
ரெயில் என்ஜின் டிரைவர்
இதில் 17 வயது வாலிபர் கடந்த 2 ஆண்டுகளாக ரெயில் என்ஜின் டிரைவராக போலியாக பணியாற்றி வந்துள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது:-
பிடிபட்ட 2 பேரும் மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள கடைகோடி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் வசிக்கும் கிராமத்திற்கும், வங்கதேசம் நாட்டிற்கும் 10 கிலோ மீட்டர் தூரம் தான் உள்ளது. பிடிபட்ட 17 வயது வாலிபர்  மேற்குவங்காளத்தை சேர்ந்த ரெயில்வே என்ஜின் டிரைவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2 பேர் கைது
உண்மையான என்ஜின் டிரைவருக்கு பதிலாக 17 வயது வாலிபர் போலியாக பணியாற்றி வந்ததும், இதற்காக மாதம் ரூ.25 ஆயிரம் வரை உண்மையான என்ஜின் டிரைவரிடம் சம்பளம் பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பயணிகள் ரெயிலை மட்டுமே இயக்கி வந்துள்ளார்.
எஸ்ராபில்ஷேக் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் 17 வயது வாலிபரிடம் இணைந்துள்ளார். ஆனால் அவர் இதுவரை ரெயில் ஓட்டியது இல்லை என்று தெரிவித்துள்ளார். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கட்டிட வேலை செய்து வந்த நிலையில், மீண்டும் கட்டிட வேலையில் சேருவதற்காக ரெயிலில் வந்த போது ஈரோட்டில் சிக்கி உள்ளார். கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாச வேலை...
கைது செய்யப்பட்டவர்கள் வங்கதேச நாட்டின் எல்லைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுதந்திர தினத்தையொட்டி நாச வேலையில் ஈடுபடும் நோக்கில் வந்தார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு மேற்குவங்காள மாநிலம் சென்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
குறிப்பாக பணி வழங்கியதாக தெரிவித்துள்ள ரெயில் என்ஜின் டிரைவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் தான் முழு விபரமும் தெரியவரும்.
இவ்வாறு ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறினர்.

Related Tags :
Next Story