சரக்கு வாகனம் மீது பஸ் மோதல்; 2 பேர் பலி
திண்டிவனத்தில் சரக்கு வாகனம் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
திண்டிவனம்,
ஈரோட்டில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சரக்கு வாகனம் புறப்பட்டது. இந்த வாகனத்தை ஈரோடு கருங்கல்பாளையம் கலைஞர்நகரை சேர்ந்த கணேசன் மகன் சண்முகவேல்(வயது 33) ஓட்டினார்.
இவருடன் ஈரோடு பட்லூர் அடுத்த மொசூர்கவந்தனூரை சேர்ந்த மாதன் மகன் எம்.ஜி.ஆர்(35), பெருந்துறை அருகே கவுண்டச்சிபாளையத்தை சேர்ந்த தர்மராஜன்(49) ஆகியோரும் வந்தனர்.
நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச்சாலையில் கர்ணாவூர்பேட்டை சந்திப்பு அருகில் வந்தபோது சரக்கு வாகனத்தின் முன்பக்க வலதுபுற டயர் பஞ்சரானது. இதையடுத்து சாலையில் சரக்கு வாகனத்தை நிறுத்தி டிரைவர் சண்முகவேல், எம்.ஜி.ஆர்., தர்மராஜன் ஆகியோர் மாற்று டயரை மாட்டிக்கொண்டிருந்தனர்.
2 பேர் பலி
அப்போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், சரக்கு வாகனத்தின் பின்புறம் மோதியது. மேலும் மோதிய வேகத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வாகன டிரைவர் சண்முகவேல், எம்.ஜி.ஆர். ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மராஜன், காயமின்றி உயிர் தப்பினார். மேலும் பஸ் கண்டக்டரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த எட்டயபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் வேலுசாமி(57) உள்பட பஸ்சில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர்.
போலீசார் விசாரணை
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய பஸ் மற்றும் சரக்கு வாகனத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் விபத்தில் பலியான சண்முகவேல், எம்.ஜி.ஆர். ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story