பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு


பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Aug 2021 3:41 AM IST (Updated: 16 Aug 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் திறந்து விட்டார்.

பவானிசாகர்
பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் திறந்து விட்டார். 
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. பவானி ஆறும், மோயாறும் கலக்கும் இடத்தில் அமைந்து உள்ள இந்த அணையானது தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. 
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது. 
கடந்த மாதம் 25-ந் தேதி மாலை 4 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 100 அடியை எட்டியது. இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 100 அடி ஆக இருந்து வருகிறது.
தண்ணீர் திறப்பு 
இந்தநிலையில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பிரதான கால்வாய் இரட்டைப்படை மதகுகளுக்கும், சென்னசமுத்திரம் கால்வாய் ஒற்றைப்படை மதகுகளுக்கும் பாசனத்திற்காக நேற்று மாலை தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மதகு  பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது அணையில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீரில் அமைச்சர், விவசாயிகள், பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். 
120 நாட்கள் 
இந்தத் தண்ணீர் டிசம்பர் மாதம் 12-ந் தேதி வரை சுழற்சி முறையில் 120 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தண்ணீரை சிக்கனமாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,416 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிக்கு வினாடிக்கு 800 கனஅடியும், குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 200 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story