‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: வேளுக்குடி- வடகட்டளைகோம்பூர் சாலை சீரமைப்பு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: வேளுக்குடி- வடகட்டளைகோம்பூர் சாலை சீரமைப்பு
x
தினத்தந்தி 16 Aug 2021 10:29 PM IST (Updated: 16 Aug 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேளுக்குடி- வடகட்டளை கோம்பூர் சாலை சீரமைக்கப்பட்டது.

கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் இருந்து, வடகட்டளைகோம்பூர் கிராமத்துக்கு செல்வதற்கு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை திருவாரூர்-மன்னார்குடி வழித்தடத்தில் இருப்பதால், வேளுக்குடி, வடகட்டளை கோம்பூர், கானூர், மங்களாபுரம், மாளிகைத்திடல், வடபாதி, ஓகைப்பேரையூர், பழையனூர், சித்தனங்குடி, நாகங்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சாலையில் கார், வேன், ஆட்டோ, லாரி, டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை குண்டும், குழியுமாக சேதம் அடைந்து காணப்பட்டது.

இதனால் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர். சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீரமைத்தனர்.

சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story