மலராது என்று சொன்ன மண்ணில் தாமரை மலர்ந்திருக்கிறது; மக்கள் ஆசி யாத்திரையில் எல்.முருகன் பேச்சு
மலராது என்று சொன்ன மண்ணில் தாமரை மலர்ந்திருக்கிறது என்று மக்கள் ஆசி யாத்திரையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.
புஞ்சைபுளியம்பட்டி
மலராது என்று சொன்ன மண்ணில் தாமரை மலர்ந்திருக்கிறது என்று மக்கள் ஆசி யாத்திரையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.
மக்கள் ஆசி யாத்திரை
பாரதீய ஜனதா கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மக்கள் ஆசி யாத்திரை எனும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலை கோவையில் மக்கள் ஆசி யாத்திரை தொடங்கியது. மத்திய இணை மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மக்கள் ஆசி யாத்திரையை தொடங்கி வைத்தனர். இந்த யாத்திரை மேட்டுப்பாளையம் வழியாக இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் வந்தடைந்தது. அப்போது மாவட்ட நிர்வாகிகள் அவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து கே.வி.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகியும், பள்ளிக்கூடத்துக்கு நிலம் வழங்கியவருமான கே.வி.காளியப்பகவுண்டர் உருவ சிலைக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்ட மேடையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பேசினார்.
பெருமை
அப்போது அவர் கூறும்போது, ‘தமிழ்நாட்டில் தாமரை மலராது என்று சொன்னவர்களின் மண்ணில் தாமரை மலர்ந்து இருக்கிறது. 12 பட்டியல் இன மத்திய மந்திரிகள், மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள் 8 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 22 பேர், 12 பெண்கள் என புதிதாக மத்திய அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முயன்றபோது எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கூச்சல் போட்டு தடுத்தனர். அதனால் தான் தற்போது உங்களிடம் ஆசி பெறுவதற்காக மோடி எங்களை அனுப்பியுள்ளார். அது தான் மக்கள் ஆசி யாத்திரை.’ என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மொடக்குறிச்சி சி்.சரஸ்வதி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் அஜித்குமார், பொதுச்செயலாளார் செந்தில்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் ஆசி யாத்திரைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்யான ராமன் உள்பட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story