ஈரோடு மாநகராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி; ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார்
ஈரோடு மாநகராட்சியில் நடந்த ஒருங்கிணைந்த துப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் நடந்த ஒருங்கிணைந்த துப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை ஆணையாளர் இளங்கோவன் பார்வையிட்டார்.
தூய்மை பணிகள்
ஈரோடு மாநகராட்சியின் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரி தூய்மை பணி செய்து வருகிறார்கள்.
மேலும் சுகாதாரப்பணியாளர்கள் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கொரோனா தோய்த்தொற்று தடுப்பு பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை மேற்கொள்ள ஆணையாளர் எம்.இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.
அதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளிசங்கர் மேற்பார்வையில் அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு துப்புரவு பணி தொடங்கி உள்ளது.
சாஸ்திரி நகர்
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உள்பட்ட 48-வது வார்டில் நேற்று துப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நடந்தது. சாஸ்திரி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகவடிவு தலைமையில் சுகாதார அதிகாரி ஜாகீர் உசேன், ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, கோபாலகிருஷ்ணன், நாச்சிமுத்து ஆகியோர் மேற்பார்வையில் 4-வது மண்டலத்துக்கு உள்பட்ட 130 துப்புரவு பணியாளர்கள் ஒரே நேரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
சாக்கடை அடைப்புகள் சுத்தம் செய்தல், குப்பைகள் அகற்றும் பணி என்று பல்வேறு பணிகளை அவர்கள் செய்தனர்.
இந்தபணியை மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், மாநகர் நல அதிகாரி டாக்டர் முரளி சங்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் இதுபோன்ற பணி நடைபெற உள்ளது. 4 மண்டலமாக பிரித்து தினசரி பணிகள் நடைபெறுவதால் 15 முதல் 20 நாட்களில் அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி முழுமைபெறும் என்றார்கள்.
Related Tags :
Next Story