வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தடையின்றி வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் வேண்டுகோள்


வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தடையின்றி வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு  விவசாயிகள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 17 Aug 2021 3:05 AM IST (Updated: 17 Aug 2021 3:05 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தடையின்றி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு
வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தடையின்றி வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எம்.முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.சி.ரத்தினசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பெரியசாமி, கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் கி.வடிவேல், புகளூர் பாரி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் வி.சண்முகராஜ், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி அறச்சலூர் செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பாசனப்பகுதிகளில் நெல் பயிரிடுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன.
பயிர்க்கடனுக்கு நிபந்தனை
இந்த நிலையில் விவசாயிகளுக்கு விதை நெல் வாங்கவும், வயல்களில் அடிப்படை வேலைகள் செய்யவும் நிதி ஆதாரம் உடனடியாக தேவைப்படுகிறது. வழக்கமாக இந்த நேரத்தில் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் வழங்கும் பயிர்க்கடன் மூலமாகத்தான் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வேளாண் பணிகளை செய்வது வழக்கம். இந்த ஆண்டும் விவசாயிகள் பயிர்க்கடனை எதிர்பார்த்து காத்து உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு தற்போது ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்து உள்ளது. அந்த நிபந்தனையின் படி பயிர்க்கடன் வழங்க, நடப்பு பருவத்தில் செய்யும் பயிர் பற்றிய விவரம் அடங்கலில் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அடங்கல் ஆவணத்தில் எப்போதும் கடந்த பசலி (பயிர் ஆண்டு) காலத்தில் போடப்பட்ட பயிர் குறித்த விவரம்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது நடப்பு பசலியில் பயிரிடப்போகும் பயிர் குறித்து ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பது முரணாக உள்ளது. மேலும் பயிர் ஆய்வு செய்து வரி வசூலிக்கும் நடைமுறை ஏற்கனவே கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நீக்கப்பட்டு விட்டது. நிலவரி விதிப்பு முறையும் அப்போதே நீக்கப்பட்டு விட்டது. எனவே தற்போது வருவாய்த்துறை மூலம் பயிர் ஆய்வு செய்து அடங்கலில் பதிவு செய்யும் முறையும் இல்லை. கள நிலமை இப்படி இருக்க, கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்க அடங்கலில் பயிர் பதிவு செய்ய வேண்டும் என்ற விதி சரியாக இருக்காது.
கோரிக்கை
இந்த நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தினால் விவசாயிகள் யாரும் பயிர்க்கடன் வாங்க முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் கலைஞர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் என்ற மிகப்பெரிய பொருளாதார ஆதாயத்தை விவசாயிகள் பெற முடியாமல் போகும். மேலும் வட்டியில்லா பயிர்க்கடன் முறை வந்த பிறகுதான் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்தினார்கள். இதுபோல் பயிர்க்கடனுக்கு தமிழக அரசு வழங்கும் வட்டி மானியம் வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு முதன்மையான வருவாயாக உள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகச்சரியான திசையில் தமிழக அரசை முன்னெடுத்துச்செல்லும் இந்த நேரத்தில் விவசாய பெருமக்கள் பயிர்க்கடன் பெற முடியாத நெருக்கடி நிலை உருவாகி உள்ளதை உணர்ந்து வழக்கம்போல எளிமையான நடைமுறைகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறி உள்ளனர்.

Next Story