உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Aug 2021 5:35 AM GMT (Updated: 17 Aug 2021 5:35 AM GMT)

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி மாநில தேர்தல் ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர்கள் ஆகியோருக்கு எதிராக தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு துறை செயலாளர் தரப்பில், வார்டு வரையறை தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் காரணமாகவே, தேர்தலை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு அதிகாரிகளை பொறுப்பாக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வார்டு மறுவரையறை பணிகள் முடிந்துவிட்டதாகவும், வார்டு சுழற்சி, இடஒதுக்கீடு பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், அதன் பின்னர் அறிவிப்பாணை வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.எம்.சுப்ரமணியம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

அதை பதிவு செய்த நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story